சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 9600 சம்பவங்கள் கடந்த வருடம் பதிவாகியுள்ளதாக சட்டத்தரணி எம்.ஏ.சி. முஹம்மட் உவைஸ் தெரிவித்தார்.
றூவிஷன் நிறுவனத்தின் அனுசரணையுடன் இலங்கை கல்வி அபிவிருத்தி கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு அட்டாளைச்சேனை ஒஸ்றா மண்டபத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சிறுவர் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதிகமான சிறுவர் துஷ்பிரயோகங்களில் 70 வீதமானவை குடும்ப உறவினர்களினாலேயே ஏற்படுத்தப்படுகின்றன. வறுமை மற்றும் பெண்களின் வெளிநாட்டு வேலை வாய்ப்பு போன்ற காரணங்களினாலேயே அதிகளவிலான சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இவர்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு என்பனவற்றிலும் இது அதிக தாக்கம் செலுத்துகின்றது. இலங்கையின் கல்வி அறிவுச் சுட்டெண் உயர்ந்த நிலையில் அமைந்துள்ள போதிலும் சுமார் 50,000 சிறுவர்கள் முற்றாக பாடசாலை செல்லாதுள்ளனர். மேலும் 450,000 சிறுவர்கள் பாடசாலை இடைவிலகி நிற்பதாகவும் யுனிசெப் நிறுவனம் தகவல் தெரிவிக்கின்றது.
இலங்கையில் 2016 ஆம் ஆண்டில் 2036 வன்புணர்வு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 350 சம்பவங்கள் மட்டுமே 16 வயதுக்கு மேற்பட்டவைகளாகும். ஏனையவைகள் சிறுவர் தொடர்பானவையாகவும் 68 வீதமானோர் தங்களது விருப்பத்துடனேயே ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் சிறுவர் தொடர்பான 1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க தண்டனை சட்டக்கோவை மற்றும் 1995 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க தண்டனைச் சட்டக் கோவை என்பன சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் உரிமை தொடர்பில் வலுவாக அமைந்துள்ளது. இதன் மூலம் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில ஆகக் குறைந்த தண்டனையாக 6 வருட சிறைத் தண்டனையும் ஆகக் கூடியது 15 வருடமாகவும் அமைந்துள்ளது என்றார்.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேைன பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ், உதவிக் கல்விப்பணிப்பாளர் எம்.ஏ. முக்தார், கல்வி அபிவிருத்தி கூட்டமைப்பின் மாவட்ட இணைப்பதிகாரி எம்.எச்.எம். உவைஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.