எமது விடுதலை கானல் நீராகுகின்றது! – சார்ள்ஸ் எம்.பியிடம் அரசியல் கைதிகள் கவலை
“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசுக்கு இரண்டு வருடங்கள் கால அவகாசம் வழங்கும் பட்சத்தில் தமது விடுதலை கானல் நீராகும் என தமிழ் அரசியல் கைதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
இலங்கை அரசுக்கு ஏற்கனவே கால அவகாசம் வழங்கப்பட்ட போதிலும் பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசு நீக்கவில்லை எனவும் தமிழ் அரசியல் கைதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர் என்றும் சார்ள்ஸ் எம்.பி. கூறினார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கொழும்பு – மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. இன்று பார்வையிட்டார்.
இதன்போது 2015ஆம் ஆண்டு ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசு நிறைவேற்றுவதற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்குவது தொடர்பாக தமிழ் அரசியல் கைதிகளுடன் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. கலந்துரையாடியுள்ளார்.
எனினும், இலங்கை அரசு ஏற்கனவே சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை என்று தமிழ் அரசியல் கைதிகள் கவலை வெளியிட்டனர் என்று சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. தெரிவித்தார்.

