மீனவர் பிரச்சனையில் மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க அ.தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தல்
மீனவர் பிரச்சனையில் மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி கூட்டம் கடந்த மாதம் 9-ந்தேதி முடிவடைந்தது.
5 மாநில தேர்தல் காரணமாக கூட்டத் தொடருக்கு 1 மாதம் இடைவெளி விடப்பட்டது. தேர்தல் முடிந்து விட்டதால் பாராளுமன்றத்தின் 2-ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (9-ந்தேதி முதல் ஏப்ரல் 12-ந்தேதிவரை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது கட்ட கூட்டம் இன்று தொடங்கியது.
பாராளுமன்றம் கூடி யதும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட பிரச்சினை குறித்து பேசினார்கள்.
இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் தங்கச்சி மடத்தை சேர்ந்த பிரட்ஜோ என்ற மீனவர் சுட்டு கொல்லப்பட்டார். மற்றொரு மீனவர் காயம் அடைந்தார். இந்த பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். முன்னதாக இது தொடர்பாக ஒத்திவைப்பு நோட்டீசும் கொடுத்து இருந்தனர்.
கேள்வி நேரம் முடிந்த பிறகு இதுபற்றி விவாதிக்கப்படும் என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.
கேள்வி நேரம் முடிந்த பிறகு இதுபற்றிய விவாதம் நடந்தது. அ.தி.மு.க. குழு தலைவர் டாக்டர் வேணுகோபால் பேசியதாவது:-
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியது கண்டிக்கதக்கது. மீனவர் பிரச்சனையில் மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக மீனவர்களிடம் இருந்து பறித்து சென்ற படகுகளையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கச்சத்தீவை மீட்கவும் மத்திய அரசு முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.