இந்தியாவின் மிகப்பெரிய மூவர்ணக்கொடியில் கேமரா மறைத்து வைக்கப்பட்டு உள்ளது – பாகிஸ்தான்
பஞ்சாப் மாநிலம் அட்டாரியில் இந்திய-பாகிஸ்தான் எல்லையில், நாட்டிலேயே மிகப் பெரியதாகக் கருதப்படும் மூவர்ணக்கொடி, மிக உயரமான கம்பத்தில் ஏற்றிவைக்கப்பட்டுள்ளது. 120 அடி நீளமும், 80 அடி அகலமும் கொண்ட அந்தத் தேசியக்கொடியை பஞ்சாப் மாநில அமைச்சர் அனில் ஜோஷி ஞாயிற்றுக்கிழமை ஏற்றி வைத்தார். 110 மீட்டர் (360 அடி) உயரமுள்ள கம்பத்தில், இந்தக் கொடி ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.
இதுவரை, ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் 91.44 மீட்டர் உயரமுள்ள கம்பத்தில் பறக்கும் தேசியக் கொடியே, மிக உயரமான கம்பத்தில் பறக்கும் கொடியாகக் கருதப்பட்டது. அட்டாரி எல்லையில் தினமும் மாலையில் நடைபெறும் இந்திய-பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் அணிவகுப்பைக் காணவரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், பஞ்சாப் அரசின் சார்பில் ரூ.3.50 கோடி செலவில் இந்தக் கொடிக் கம்பம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய மூவர்ணக்கொடியில் கேமரா மறைத்து வைக்கப்பட்டு உள்ளது என பாகிஸ்தான் அச்சம் அடைந்து உள்ளது. 360 அடி உயரத்தில் பறக்கவிடப்பட்டு உள்ள மூவர்ணக்கொடியில் கேமரா மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என பாகிஸ்தான் பாதுகாப்பு படை கவலை அடைந்து உள்ளது. சர்வதேச எல்லையில் உளவு பணிக்காக இந்திய எல்லைப் பாதுகாப்பு படை மூவர்ணக்கொடியை பயன்படுத்தலாம் என பாகிஸ்தான் கவலை அடைந்து உள்ளது. அட்டாரி எல்லையில் கொடி அமர்வு கூட்டத்தின் போது பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் கவலையை தெரிவித்து உள்ளனர் என எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறிஉள்ளனர்.
இப்பிரச்சனையை எழுப்பவே சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் மூவர்ணக்கொடியில் கேமரா எதுவும் மறைத்து வைக்கப்படவில்லை என எங்களுடைய தரப்பில் பாகிஸ்தானிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது என இந்திய எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி கூறிஉள்ளார். பாகிஸ்தான் தரப்பில் இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமான புகார் எதுவும் தெரிவிக்கப்படவில்லை, எனவே இந்திய தரப்பில் எழுத்துப்பூர்வமான பதில் அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.