பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளின் வரிசையில் வங்காலை கிராமத்திற்கு உற்பட்ட சுமார் 13 வர்த்தக நிலையங்களில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் விற்பனையை தாமாக முன் வந்து கைவிட்டுள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் இன்று(25) வியாழக்கிழமை சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதாக வங்காலை பொது சுகாதார பரிசோதகர் வி.ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்…
பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளின் வரிசையில் வங்காலை பிரதேசத்திற்கு உற்பட்ட 08 இற்கும் மேற்பட்ட உணவகங்கள் மற்றும் 05 இற்கும் மேற்பட்ட சிறு வியாபார நிலையங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் தாமாக முன் வந்து புகையிலை பாவனையை தங்கள் வியாபார நிலையங்களில் முற்றாக கைவிடுவதற்கு தீர்மானித்திருந்தனர்.
சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களினால் ஏற்படும் புற்று நோய் போன்ற ஆபத்தான நோய் நிலமைகள், இளம் பருவத்தினரிடையே புகையிலைப்பொருட்கள் ஏற்படுத்தும் பாதிப்பு மற்றும் தங்கள் பிரதேசத்தின் எதிர் கால சந்ததி குறித்தான பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றி பொதுசுகாதார துறையினரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள்,சுக நலக் கல்வி செயற்திட்டங்களின் வழி பெற்றுக்கொண்ட விழிப்புணர்வு மூலம் தாமாக முன்வந்து இந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை(25) முதல் இந்த பிரதேசத்தில் 13 இற்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் சிகரெட் மற்றும் புகையிலைப்பொருட்களின் விற்பனையை முற்றாக தடை செய்துள்ளனர்.
தமது விற்பனை நிலையங்களில் சிகரெட் மற்றும் புகையிலைப்பொருட்களின் விற்பனையை முற்றாக தடை செய்துள்ள வியாபார நிலையங்களின் உரிமையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இன்று வியாழக்கிழமை காலை நறுவிலிக்குளம் பொது சுகாதார பரிசோதரகர் அலுவலகத்தில் இடம் பெற்றது.
நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் மேற்பார்வை பொதுசுகாதார பரிசோதகர் சி.வின்சன், மற்றும் மன்னார் மாவட்டத்தின் உணவு மருந்து பரிசோதகர் எஸ்.தயாபரன் ஆகியோர் கலந்து கொண்டு குறித்த வியாபார நிலையத்தின் உரிமையாளர்களிற்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.
எதிர் வரும் காலங்களின் இது மேலும் விரிவு படுத்தப்பட்டு இந்த பிரதேசத்தின் ஏனைய வியாபார நிலையங்களும் இச்செயற்திட்டத்தில் உள்வாங்கப்படும் எனவும் வங்காலை பொதுசுகாதார பரிசோதகர் வி.ஜெயச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.
-மன்னார் நிருபர்-
(25-1-2018)