கொல்கத்தாவில் உள்ள மிகப் பழமையான கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து
மேற்குவங்கம் மாநிலத் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள மிகப் பழமையான கட்டிடத்தில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது, கட்டுக்கடங்காமல் எரியும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்குவங்கம் மாநிலத் தலைநகரான கொல்கத்தாவின் மத்தியப் பகுதியில் புர்ரா பஜார் என்ற இடத்தில் இருக்கும் மிகவும் பழமையான கட்டிடம் ஒன்றில் மார்கெட் செயல்பட்டு வருகின்றது. நேற்றிரவு சுமார் 9.30 மணி அளவில் இக்கட்டிடத்தின் ஒரு பகுதியில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. அந்தக் கட்டிடம் முழுவதும் மரப் பொருட்கள் அதிகமாக இருப்பதால் தீ வேகமாக பரவி கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.
தீ விபத்து குறித்து தகவலறிந்து 35 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் கட்டுக்கடங்காமல் எரியும் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், கட்டிடத்தில் உள்ளே இருந்தவர்களையும் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இன்று பகல் 12 மணி வரை தீயை அணைக்க முடியாமல் திண்டாடி வரும் தீயணைப்பு படையினர் கூடுதல் வாகனங்களையும் வரவழைத்துள்ளனர்.
தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்து காணப்படுகிறது. இவ்விபத்தில் ஏதேனும் உயிர் பலி ஏற்பட்டுள்ளதா எனும் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.