விரைவில் பிரித்தானியப் பிரஜைகளுக்கு நீல நிறக் கடவுச்சிட்டு.!
நீல நிறக் கடவுச்சீட்டுக்கள் அடுத்த மாதம் முதல் வழங்கப்படும் என்று உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரித்தானியப் பிரஜைகளுக்கு இந்த நீல நிறக் கடவுச் சீட்டுக்கள் வழங்கப்படவுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதைத் தொடர்ந்து தற்போதைய பேர்கன்டி(burgundy) வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டின் பின் அட்டையில் இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸின் மலர் சின்னங்கள் இடம்பெறும்.
நீல நிறக் கடவுச்சீட்டு 1921 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 1988 க்குப் பின்னர் அப்போதைய ஐரோப்பிய பொருளாதார சமூகத்தின் உறுப்பினர்கள் கடவுச்சீட்டின் வடிவமைப்புகளை மாற்றியமைக்கச் சம்மதித்தனர்.
கடவுச்சீட்டுக்கள் எங்களது தேசிய அடையாளத்துடன் மீண்டும் இணைந்து கொள்ளும் என்று உள்துறை அமைச்சர் பிரித்தி பட்டேல் தெரிவித்தார்.
பிரெக்ஸிற் பிரித்தானியாவுக்கு உலகில் ஒரு புதிய பாதையை உருவாக்குவதற்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கியுள்ளது என்றும் இதன் மூலம் கடவுச்சீட்டு நீல மற்றும் தங்க வடிவமைப்புக்கு மீளவும் வந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
கடவுச்சீட்டின் நிறத்தை மாற்றவேண்டுமென பிரித்தானியா கட்டாயப்படுத்தப்படவில்லை. ஆயினும் 1980 களில் மற்றைய அங்கத்துவ நாடுகளுடன் சேர்ந்து நிறத்தை மாற்றியது.
புதிதாக வழங்கப்படும் அனைத்துக் கடவுச்சீட்டுக்களும் வரும் கோடை காலத்தில் இருந்து நீல நிறமாக இருக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதுவரையில் பேர்கன்டி கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படும், அவை காலாவதியாகும் வரை பயணத்திற்குச் செல்லுபடியாகும்.
நீல நிறக் கடவுச்சீட்டுக்களை பிரெஞ்சு நிறுவனமான தேல்ஸின் ஜெமாரோ தயாரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.