தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் அமைதிப்படை என்ற போர்வையில் இந்தியப் படைகள் புரிந்திட்ட அடக்குமுறைகளுக்கு எதிராக அஹிம்சை வழியில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து வீரச்சாவடைந்த நாட்டுப்பற்றாளர் – ஈகச்சுடர் – தியாக தீபம் அன்னை பூபதியின் 29ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் மட்டக்களப்பில் நேற்று உணர்வெழுச்சியுடன் நடைபெற்றன.
அன்னை பூபதியின் கல்லறை அமைந்துள்ள மட்டக்களப்பு, நாவலடி கடற்கரை நினைவு வளாகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நினைவுதின நிகழ்வு நடைபெற்றது.
கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அன்னை பூபதியின் நினைவுத் தூபியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு ஈகச்சுடர்கள் ஏற்றப்பட்டன. அத்துடன் நினைவுரைகளும் நிகழ்த்தப்பட்டன.
இந்நிகழ்வில் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், ச.வியாழேந்திரன், முன்னாள நாடாளுன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா மற்றும் பெண்கள் அமைப்பினர், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இதேவேளை, அன்னை பூபதியின் 29ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினால் காந்தி பூங்கா முன்பாக நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டது.
இதன்போது அன்னை பூபதியின் படத்துக்கு மலரஞ்சலி, அகவணக்கம் செலுத்தப்பட்டது.
கடந்த 58 நாட்களாக தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், உண்ணாவிரதப் போராட்டம் மூலம் அஹிம்சையை உலகுக்கு வெளிப்படுத்திய முதல் பெண்மணி அன்னை பூபதியின் நினைவு தினத்தை அமைதியான முறையில் – சாத்வீக ரீதியில் அனுஷ்டித்தனர்.
இதன்போது பட்டதாரிகளினால் தாக சாந்தி நிகழ்வும் நடத்தப்பட்டதுடன் அன்னை பூபதி நினைவுரைகளும் நிகழ்த்தப்பட்டன.
அன்னை பூபதியின் வழியில் தமது சாத்வீகப் போராட்டத்தைத் தாங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்போவதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இதன்போது தெரிவித்தனர்.