Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / போர்க்களமானது வடமத்திய மாகாண சபை! – ஆளும் கட்சி – எதிர்க்கட்சி கைகலப்பு; பலர் காயம்

போர்க்களமானது வடமத்திய மாகாண சபை! – ஆளும் கட்சி – எதிர்க்கட்சி கைகலப்பு; பலர் காயம்

வடமத்திய மாகாண சபையின் தவிசாளருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சபையின் ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டிருந்ததால் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்குமிடையில் நேற்றுக் கைகலப்பு ஏற்பட்டு சபை வன்முறைக் களமாக மாறியிருந்தது.

வடமத்திய மாகாண சபையின் தவிசாளருக்கு எதிராக சபையில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் 11 உறுப்பினர்களால் முன்னர் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை பல எதிர்ப்புகளையடுத்து நிராகரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், உள்ளூராட்சி சபை செயலாளரின் பரிந்துரைக்கமைய நேற்று சபை நடவடிக்கைகளுக்கான ஒழுங்குப்பத்திரத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை உள்வாங்கப்பட்டிருந்தமையால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

உடனடியாக நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும், புதிய தவிசாளர் ஒருவரையும் நியமித்து சபை நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சபையில் கோஷம் எழுப்பினர்.

எனினும், இவர்களின் கோரிக்கையை நிராகரித்த தவிசாளர் எதிர்வரும் 8ஆம் திகதிவரை சபை நடவடிக்கைகளை ஒத்திவைப்பதாக அறிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஐ.தே.கவின் உறுப்பினர்கள் தவிசாளரின் இருக்கையை முற்றுகையிட முயன்றபோது களேபரம் ஏற்பட்டது.
ஆளுங்கட்சியான சு.கவுக்கும் எதிர்க்கட்சியான ஐ.தே.கவுக்குமிடையில் சபையில் கைகலப்பு ஏற்பட்டதையடுத்து செங்கோலை ஐ.தே.க. உறுப்பினர்கள் தூக்கிச்செல்ல முற்பட்டனர். அத்துடன், சபையில் இருந்த பொருட்களும் நாலாபுறமும் தூக்கியெறியப்பட்டு கைகலப்பு வன்முறையாக மாறியது.

இதனையடுத்து தவிசாளர் சபையை விட்டு வெளியேறினார். பின்னர் பாதுகாப்புத் தரப்பினரின் உதவியுடன் பிரச்சினை சுமுகநிலைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவத்தில் பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …