சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற இந்து பக்தர்களுக்கு, நந்திக் கொடியை ஏந்த வேண்டாம் என்றும், சிவனுக்குரிய கோஷங்களை எழுப்ப வேண்டாம் என்றும் அச்சுறுத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் முழுமையானதொரு விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்து இலங்கை மலையக இந்துகுருமார் ஒன்றியம் ஜனாதிபதி, பிரதமர், இந்துசமய விவகார அமைச்சர் ஆகியோருக்குக் கடிதம் அனுப்பவுள்ளது.
தமது ஒன்றியத்தின் சட்டஆலோசகர் ஊடாக இதற்குரிய நடவடிக்கை இடம்பெற்று வருகிறது என்றும், இது விடயத்தில் பொலிஸார் பக்கச்சார்பாக நடந்துகொண்டது கவலையளிக்கின்றது என்றும் இலங்கை மலையக இந்துகுருமார் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் சிவஸ்ரீ வேலு சுரேஸ்வரக் குருக்கள் தெரிவித்தார்.
யாழ்பாணத்திலிருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற இந்து பக்தர்களுக்கு, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த குழுவொன்றால் கடந்த 22 ஆம் திகதி சனிக்கிழமை மலை உச்சியில் வைத்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்புக் கடமையில் இருந்த பொலிஸாரும், பக்தர்களுக்கு எதிராகச் செயற்படும் வகையில் செயற்பட்டதால் தமக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில் அவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறையிடவில்லை.
எனினும், யாத்திரையை ஏற்பாடு செய்திருந்த, இலங்கை மலையக இந்துகுருமார் ஒன்றியத்திடம் குறித்த பக்தர்கள் முறையிட்டனர்.
இது தொடர்பில் குறித்த ஒன்றியத்தின் ஸ்தாபகரும் பொதுச்செயலாளருமான சிவஸ்ரீ வேலு சுரேஸ்வர குருக்களிடம் வினவியபோது,
“நந்திக்கொடியை ஏந்தவேண்டாம் எனவும், ‘நமசிவாய’ என்ற சிவநாமத்தை உச்சரிக்க வேண்டாம் எனவும் அச்சுறுத்தப்பட்டுள்ளது. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். நல்லிணக்கம், இன ஐக்கியம் என்று பேசப்பட்டுவரும் காலகட்டத்தில் இப்படியொரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை பெரும் கவலையளிக்கின்றது. பொலிஸாரும் பக்கச்சார்பாக செயற்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி, நீதியை நிலைநாட்ட வேண்டும் எனக் கோரி எமது அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்துமத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோருக்குக் கடிதம் அனுப்பவுள்ளது. அத்துடன், சிவனொளிபாதமலை வரும் இந்து பக்தர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்” – என்றார்.