பெங்களுரு டெஸ்ட் போட்டி – இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
பெங்களுருவில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. புனேயில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. . ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 189 ரன்களில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 122.4 ஓவர்களில் 276 ரன்களில் ஆல்–அவுட் ஆனது. 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை இந்தியா நிதானமான ஆட்டம் மூலம் தொடங்கியது. இந்திய வீரர்கள் ஓரளவு நேர்த்தியாக விளையாடினர், ஆனால் நீடிக்கவில்லை.
இன்று 4-வது நாள் ஆட்டத்தில் இந்தியா 274 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 187 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலிய அணியில் ஹேசில்வுட் 6 விக்கெட்களை கைப்பற்றினார். ஸ்டார்க், ஸ்டீவ் ஓ கீபே தலா இரு விக்கெட்களை வீழ்த்தினர். இதனையடுத்து ஆஸ்திரேலியா 188 ரன்கள் அடித்தால் வெற்றி என இலக்கோடு களமிறங்கியது.
ஆஸ்திரேலியாவின் கையில் ஆட்டம் சென்றுவிடும் என்ற நிலையில் இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்க ஆட்டக்காரர் வார்னரை 17 ரன்களுடன் வெளியேற்றினார் அஸ்வின். இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ரென்ஷா கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆஸ்திரேலிய வீரர்கள் நின்று விளையாடாத வண்ணம் தொடர்ந்து விக்கெட்டை எடுத்தனர் இந்திய பந்து வீச்சாளர்கள்.
இந்திய சூழல் பந்து வீச்சாளர் அஸ்வின் சுழலில் ஆஸ்திரேலியா சிக்கியது என்றே சொல்லலாம். அஸ்வின் இந்திய அணிக்கு 6 விக்கெட்களை பெற்று தந்து வெற்றியடைய செய்தார்.
ஆஸ்திரேலிய அணியில் சுமித் மட்டும் அதிகப்பட்சமாக 28 ரன்கள் எடுத்தார். 2வது இன்னிங்சில் 35.4 ஓவர்களை எதிர்க்கொண்ட ஆஸ்திரேலியா 10 விக்கெட்கள் இழப்பிற்கு 112 ரன்கள் மட்டும் எடுத்தது. இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா – ஆஸ்திரேலியா 1-1 என்ற சமநிலையில் உள்ளது.