அரசியல் கட்சி தொடங்க நடவடிக்கை எடுத்து வரும் ரஜினிகாந்த், பிரத்யேகமான முத்திரை ஒன்றை பயன்படுத்தி வருகிறார்.
2 நடுவிரல்கள் மற்றும் கட்டை விரலை மடித்தும், ஆள்காட்டி விரல் மற்றும் சுண்டு விரலை உயர்த்தியும் காண்பிக்கும் அந்த முத்திரையை, தனது ‘பாபா’ படத்திலேயே பயன்படுத்தி இருந்தார்.
இந்த ‘பாபா’ முத்திரை அவரது ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சிகளில் மேடையில் பொறிக்கப்பட்டு இருந்ததுடன், அவரது ரசிகர்களும் அந்த முத்திரையுடன் கூடிய அட்டைகள், கொடி போன்றவற்றை தயாரித்து வினியோகித்து வருகின்றனர்.
இந்த முத்திரை, தங்களது நிறுவனத்தின் லோகோ போல இருப்பதாக கூறி, ‘வாக்ஸ்வெப்’ எனப்படும் சமூக நெட்வொர்க் செயலியை வடிவமைத்துள்ள மும்பையை சேர்ந்த நிறுவனம் ஒன்று உரிமை கொண்டாடி வருகிறது. இது தொடர்பாக ரஜினிகாந்துக்கும் கடிதம் எழுதியுள்ளதாக அதன் நிறுவனர் யாஷ் மிஸ்ரா கூறியுள்ளார்.
ரஜினிகாந்தின் பாபா திரைப்படம் 2002–ம் ஆண்டிலேயே வெளிவந்துள்ள நிலையில், இந்த நிறுவனம் சுமார் 18 மாதங்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.