ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களுக்குமிடையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது கடும் வாய்த்தர்க்கம் நடந்ததால் கடும் அமளிதுமளி ஏற்பட்டதாக அறியமுடிகின்றது.
அமைச்சரவைக் கூட்டம் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே இந்த வாக்குவாதங்கள் அமைச்சர்களிடையே நடந்துள்ளன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளிநாடு சென்றிருப்பதால் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
கண்டி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகள் குறித்து இந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது கருத்து வெளியிட்ட நகர அபிவிருத்தி மெகாபொலிஸ் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, கிரமமாக திட்டமிடுவதன் மூலம் நெடுஞ்சாலை நிர்மாண செலவுகளை குறைக்கலாமென்று சுட்டிக்காட்டினார்.
“குருநாகலில் இருந்து கலகெதர ஊடாக கட்டுகஸ்தோட்டை வரையான அதிவேக நெடுஞ்சாலையை நான்கு ஒழுங்கை பாதைகளாக மாற்றியிருந்தால் செலவு குறைந்திருக்கும். முறையான திட்டமிடல்களும், ஒப்பந்தங்களை உரியவர்களுக்கு வழங்குவதில் உள்ள குறைபாடுகளும் செலவுகள் அதிகரிக்கக் காரணம்” என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்ட கையோடு நெடுஞ்சாலைகள் பற்றிய வாய்த்தர்க்கம் ஆரம்பமாகியிருக்கிறது.
நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இது தொடர்பில் விளக்கங்களை அளித்துக்கொண்டிருந்தபோது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் கருத்துத் தெரிவிக்க முற்பட்டதால் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கண்டி மாவட்டத்தைச் சார்ந்தவர் என்பதால் கண்டி அதிவேக நெடுஞ்சாலைக்கு முக்கியத்துவம் வழங்கி செயற்படுகிறார் என்று சாரப்பட சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் பேசத் தொடங்கினர். இதன்போது அமைச்சர் கிரியெல்லவுக்கு ஆதரவாக கண்டி மாவட்ட அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, சரத் அமுனுகம, ரவூப் ஹக்கீம் ஆகியோர் கருத்துகளை வெளியிட்டனர்.
என்றாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, மகிந்த அமரவீர, தயாசிறி ஜயசேகர ஆகியோர் தொடர்ந்தும் கடுமையான கருத்துகளை வெளியிட்டனர். இதனால் ஆத்திரமுற்ற அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கடந்த தேர்தல்களில் வெற்றியைப் பெற்றுக்கொடுக்க முடியாதவர்கள் இப்போது வந்து அபிவிருத்தி பற்றிப் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதென சாடியுள்ளார்.
“உங்களுடைய குருநாகல் தொகுதியிலேயே உங்களுக்கு ஓட்டு இல்லை. தெற்கில் கூட தோற்றீர்கள். உங்கள் கட்சியின் ஓட்டுகளை பெற்றுக்கொடுக்கக்கூட உங்களால் முடியவில்லை. ஆனால், நாங்கள் கண்டியில் வென்றோம். அரசமைக்க நாங்களும் முக்கிய பங்கை வகித்திருக்கிறோம்” என்று அமைச்சர் கிரியெல்ல கூறியதும் நிலைமை முற்றி அமைச்சரவையே அமளியானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் தலையீட்டினால் பின்னர் நிலைமை சுமுகமடைந்ததாக அறியமுடிகின்றது.