ராணுவ அலுவலர் பணிக்கான தேர்வுக்கு முன்னதாகவே கேள்வித்தாள்களை கசியவிட்ட வழக்கு – 3 உயரதிகாரிகள் கைது
ராணுவ அலுவலர் பணிக்கான தேர்வுக்கு முன்னதாகவே கேள்வித்தாள்களை கசியவிட்ட வழக்கில் மேலும் மூன்று உயரதிகாரிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராணுவ பலத்தில் உலகில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்திய பாதுகாப்பு படை பணியில் சேர கடந்த மாதம் 26-ம் தேதி நாடு முழுவதும் எழுத்து தேர்வுகள் நடைபெற்றது.
இந்நிலையில், மராட்டிய மாநில தலைநகரான மும்பையை அடுத்துள்ள தானே பகுதியில் நடைபெற்ற தேர்வுகளில் பங்கேற்க வந்தவர்களில் சிலர், தேர்வு மையங்களுக்கு செல்லாமல் தாங்கள் தங்கியிருந்த லாட்ஜ் அறைகளில் இருந்தவாறே தேர்வுகளை எழுதிகொண்டிருப்பதாக தானே நகர குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து, போலீஸ் படையினர் விரைந்து சென்று அந்த இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது, முன்கூட்டியே கசிந்த கேள்வி தாள்களை கையில் வைத்துகொண்டு சிலர் மனம்போன போக்கில் தேர்வு எழுதியதை அறிந்த போலீசார் திடுக்கிட்டனர்.
பிடிபட்ட மாணவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தியபோது மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
ராணுவ பணிக்கு இளைஞர்களை தயார்படுத்தும் சிறப்பு பயிற்சி அளிக்கும் ஒரு நிறுவனத்தின் ஏற்பாட்டின்படி, தேர்வின்போது என்னென்ன கேள்விகள் கேட்கப்படும் என்பதை கேள்வித் தாள்களை தயாரித்த ராணுவ உயரதிகாரிகள் முன்கூட்டியே சில தரகர்கள் மூலமாக வெளியிட்டுள்ளனர்.
அதில் உள்ள கேள்விகளுக்கு ஏற்ப விடைகளை ஏற்கனவே சரிபார்த்து கொண்டு மிக சரளமாக இவர்கள் தேர்வு எழுதி கொண்டிருந்தனர் என்பது அப்போது வெட்ட வெளிச்சம் ஆனது. இப்படி, வெளியான கேள்வித் தாள்களை தலா 2 லட்சம் ரூபாய்க்கு ஒரு கும்பல் விற்பனை செய்ததும், இந்த மாபெரும் துரோகத்துக்கு ராணுவ உயரதிகாரிகளில் சிலர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, பணத்தை செலவு செய்து குறுக்கு வழியில் ராணுவ வேலையில் சேர முயற்சித்து, வம்பில் சிக்கிக் கொண்ட சுமார் 350 மாணவர்களை வளைத்துப் பிடித்த போலீசார், ராணுவ தேர்வுக்கு பயிற்சி அளித்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள், இடைத்தரகர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த ராணுவ உயரதிகாரிகள் உள்பட 18 பேரை கைது செய்தனர்
பிடிபட்ட மாணவர்கள் மற்றும் கைதானவர்களில் பலர் தானே, நாக்பூர், கோவா ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் ராணுவத்தில் ஓய்வு பெற்றவர்கள் உள்பட சில அதிகாரிகளுக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, ராணுவ உயரதிகாரிகளான ரவிந்தர் குமார், தரம்விர் சிங், நிகாம் குமார் ஆகியோரை கைது செய்த போலீசார் இன்று அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.