மஹிந்த அணியான பொது எதிரணியில் இப்போது பெரும் விரிசல் ஏற்பட்டிருக்கின்றது எனவும், வெகுவிரைவில் அந்த அணியிலுள்ள ஏழு உறுப்பினர்கள் விலகி அரசுடன் சேர்ந்துகொள்ளப்போகின்றனர் எனவும் வெளிவந்திருக்கும் செய்தி வெறும் கற்பனையே எனவும், இவ்வாறு அரசு அடிக்கடி காணும் பகற்கனவுகள் ஒருபோதும் பலிக்கப்போவதில்லை எனவும் பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது:-
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார பொது எதிரணியில் விரிசல் ஏற்பட்டிருப்பதால் அந்த அணியிலுள்ளவர்கள் படிப்படியாக விலகி அரசுடன் இணைந்துகொள்ளவுள்ளனர் என வெளியிட்டுள்ள செய்தி அவரது சொந்தக் கற்பனையாகும்.
நல்லாட்சி அரசின் சீரற்ற நிர்வாகத்தாலும் தான்தோன்றித்தனமான நடவடிக்கையாலும் நாளுக்குநாள் அதன் செல்வாக்கு மக்கள் மத்தியில் குறைவடைந்து வந்திருக்கின்றது.
இந்நிலையில், எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள அரச தரப்பினர் பொது எதிரணி பலமிழந்துவருவதாகக் கூறிவருவது அவர்களின் இயலாமையையே காட்டுகின்றது” – என்று தெரிவித்துள்ளார்.