ரெயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினா
சென்னை மெரினா கடற்கரை சாலையில், காந்தி சிலை அருகே குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கத்தை வழங்கினார்.
ஒவ்வொரு ஆண்டும், தமிழக அரசு, வீர தீர செயல்கள் புரிந்த அரசு ஊழியர்கள், பொதுமக்களுக்கு வீர தீரச்செயல்களுக்கான அண்ணா பதக்கங்களை வழங்கி வருகிறது. இப்பதக்கம் பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையும், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும். இவ்வாண்டுக்கான வீர தீரச்செயலுக்கான அண்ணா பதக்கத்துக்கு எழும்பூர் ரெயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த கி. சண்முகம் தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.
கடந்த ஆண்டு ஜூலை 16-ந்தேதி காலை, சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பயணி, நகர்ந்து சென்று கொண்டிருந்த தாதர் விரைவு வண்டியில் ஏற முற்பட்டபோது திடீரென்று கால் இடறி ரெயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிக்கொண்டார். இந்தநேரத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்புப்படையில் காவலராக பணிபுரியும் கி.சண்முகம் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் விரைந்துசென்று மேற்படி பயணியை மீட்டு காப்பாற்றினார்.
தனது உயிரையும் பொருட்படுத்தாமல், துணிச்சலுடன் பயணியின் உயிரை காப்பாற்றிய கி.சண்முகத்தின் வீர தீரசெயலை பாராட்டும் வகையில் தமிழக அரசின் சார்பில் அவருக்கு வீரதீரச்செயலுக்கான அண்ணா பதக்கத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அவருக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையும், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கத்தையும், சான்றிதழையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
தமிழ்நாடு அரசு, மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த கோட்டை அமீரின் பெயரால், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் என்ற பதக்கத்தினை தோற்றுவித்து, ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்திற்காக சிறந்த சேவையாற்றி வரும் ஒருவருக்கு அப்பதக்கத்தை வழங்கி வருகிறது. இப்பதக்கம் பெறுபவர்களுக்கு பதக்கமும், ரூ.25 ஆயிரத்திற்கான கேட்புக்காசோலையும் மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு இந்த விருதுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் ஐ.சாதிக் பாஷா தேர்வு செய்யப்பட்டார். 2017-ம் ஆண்டு இரு கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினையை சுமுகமாக தீர்க்க இவர் காவல்துறைக்கு உதவி புரிந்ததற்காக இந்த பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு பதக்கத்தையும் ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையையும், சான்றிதழையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
காந்தியடிகள் காவலர் பதக்கம், கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்தியதில் மெச்சத்தக்க வகையில் பணிபுரிந்த தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு வழங்கப்படுகிறது. இப்பதக்கம் பெறுபவர்களுக்கு, ரூ.40 ஆயிரத்திற்கான காசோலையும் மற்றும் பதக்கமும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.கண்ணன், சேலம் மண்டலம் மத்திய புலனாய்வுபிரிவு சார்பு ஆய்வாளர் க.ராமகிருஷ்ணன், வேலூர் மாவட்டம் பொன்னை காவல் நிலையம் தலைமைக்காவலர் கோ.நாராயணன், விழுப்புரம் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தலைமை காவலர் ஜோசப், பழவந்தாங்கல் முதல் நிலை காவலர் கோ.நாராயணன் ஆகியோருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தினை கடைபிடித்து மாநிலத்திலேயே அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயியை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் சிறப்பு விருது வழங்கப்படுகிறது.
தர்மபுரி மாவட்டம், குள்ளனூர் விவசாயி முனுசாமி இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு வேளாண்மைத்துறை சிறப்பு விருதையும், ரூ.5 லட்சத்திற்கான காசோலையையும், சான்றிதழையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்