ஐக்கிய அமெரிக்காவின் ஆயுதப்படைகளை இலங்கைக்குள் களமிறக்கவில்லை எனவும் இலங்கையின் பாதுகாப்பு படைகளின் பாதுகாப்பில் மட்டுமே இலங்கை உள்ளதாகவும் இராணுவ ஊடகப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டின் நெருக்கடி நிலைமைகளை அடுத்து இலங்கைக்குள் அமெரிக்க இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவருகின்ற நிலையில் அதன் உண்மைத்தன்மை குறித்து வினவிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கைக்குள் எந்தவித சர்வதேச இராணுவ படைகளும் களமிறக்கப்படவில்லை எனவும், குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவின் இராணுவப்படைகள் இலங்கைக்குள் குவிக்கப்பட்டுள்ளதாக தொடர்ச்சியாக கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றதன.
ஆனால் எமது பாதுகாப்பு படையினர் மாலி தீவுகளுக்கு அனுப்பப்படவுள்ள காரணத்தினால் எமது இராணுவ வாகனங்கள் சில பரிசோதிக்கபட்டு வருகின்றதாகவும், குறித்த வாகனங்கள் அனைத்துமே எமக்கு ஐக்கிய நாடுகள் அமைதிப்படை மூலமாக வழங்கப்பட்ட வாகனங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவற்றை பரிசோதனை செய்து தயார்படுத்தி வருகின்றோம். அந்த புகைப்படங்களை வைத்துக்கொண்டே சில வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றது.
எனினும் அமெரிக்க இராணுவ படைகளை இலங்கைக்குள் கொண்டுவரவில்லை. அவர்கள் வருவதாக கோரவும் இல்லை. இலங்கையில் தற்போது நிலவும் பதற்றமான நிலைமைகளை கையாள எமது முப்படையினர் மற்றும் பொலிஸ் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் இயல்பு வாழ்கையை குழப்பவே சிலர் பொய்யான தகவல்களை பரப்புவதன் மூலமாக முயற்சித்து வருகின்றனர்.
அதோடு நாட்டில் மேலும் தொடர்ச்சியாக தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டின் சகல பகுதிகளிளும் முப்படையினர் குறிப்பாக இராணுவம் மற்றும் பொலிஸ் தரப்பினர் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றதாகவும் இராணுவ ஊடகப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.