Monday , November 18 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கடுமையான நிலைப்பாட்டை எடுக்குமாறு அமெரிக்காவிடம் கோரினோம்- சுமந்திரன்

கடுமையான நிலைப்பாட்டை எடுக்குமாறு அமெரிக்காவிடம் கோரினோம்- சுமந்திரன்

ஜெனிவாவில் இன்றைய சிறிலங்கா தொடர்பான அமர்வின் போது, அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று, அமெரிக்காவிடம் வலியுறுத்தியிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் மற்றும் ஐ.நாவுக்கான அமெரிக்காவின் பதில் பிரதித் தூதுவர் கெல்லி கியூரியையும் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதன்போது, பொறுப்புக்கூறல் விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம் மந்தகதியில் செயற்படுவதைக் கருத்தில் கொண்டு, இன்றைய கூட்டத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் புதிய யோசனைகளை அமெரிக்கா வரவேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்புகள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள, எம். ஏ. சுமந்திரன் ,

“முதலாவதாக ஐ.நா உதவி பொதுச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் மற்றும் அவருடன் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான மாரி ஜமாசிட்டா ஆகிய இருவரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தோம்.

அண்மையில் இவர்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தவர்கள். அவர்களுக்கு இலங்கையின் நிலைமை நன்றாகவே தெரியும்.

அவர்களுடன் உலக தமிழர் பேரவைப் பிரதிநிதிகள் தங்களுடைய நிலைபாட்டையும் முன்வைத்தனர்.

உலக தமிழர் பேரவையினர் எவ்வாறு சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருந்தனர் என்றும் எவ்வாறு சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பினை வழங்கினார்கள் என்றும் குறிப்பிட்டனர்.

எனினும் இப்போது சிறிலங்கா அரசாங்கம் முன்னேற்றகரமாக நகரவில்லை, முன்னேற்றகரமான நகர்வுகளில் பல தாமதங்கள் உள்ளன. குறிப்பாக பொறுப்புக்கூறல் விடயத்தில் இருந்து விலகுகின்ற தன்மையினை தொடர்ந்தும் வெளிப்படுத்தி வரும் காரணத்தினால் இன்று நடைபெறவுள்ள ஜெனிவா கூட்டத்தொடரில் சில கடுமையான முடிவுகளை அனைத்துலக சமூகம் எடுத்தாக வேண்டும் என்பதை மிகவும் திடமாக வலியுறுத்தியிருந்தனர்.

இதன்போது கருத்து கூறிய ஐ.நா அதிகாரிகள் , இது நாடுகளுடைய பேரவை, ஆகவே நாடுகள் தான் அதற்கான தீர்மானங்களை எடுக்க வேண்டும். எனினும் தங்களுடைய பங்களிப்பை தாம் சரியாக செய்வதாக எமக்கு உறுதியளித்தனர்.

இரண்டாவதாக, ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதரகத்தில் உதவித் தூதுவரை சந்தித்தோம். கெல்லி கியூரி என்கின்ற தூதுவர் தான் வெளிவிவகார விவகாரங்களுக்கும் பொறுப்பாக உள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இன்று வெளியிடும் அறிக்கையை தொடர்ந்து ஒவ்வொரு நாடும் தமது நிலைப்பாட்டை முன்வைக்கும். அதை அமெரிக்கா முன்னின்று வலியுறுத்த வேண்டும் என்றும், மனித உரிமை ஆணையாளரின் புதிய யோசனைகளை அமெரிக்க வரவேற்க வேண்டும் என்றும் நாங்கள் அவரிடம் கேட்டுக்கொண்டோம்.

சிறிலங்கா கூறும் விடயங்கள், அதற்கு பதில் கூறும் நிலைப்பாடுகளில் அமெரிக்கா கடுமையான ஒரு நிலைப்பாட்டை கைக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டோம். அவரும் அதற்கு சாதகமான பதிலை கொடுத்திருந்தார்” என்று தெரிவித்துள்ளார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …