Monday , October 20 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையின் நகல் வடிவம் தயார்! – மே 3,4 இல் இறுதி செய்யப்படும்

புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையின் நகல் வடிவம் தயார்! – மே 3,4 இல் இறுதி செய்யப்படும்

புதிய அரசமைப்பைத் தயாரிப்பது தொடர்பான இடைக்கால அறிக்கையின் நகல் வடிவத்தை அடுத்த ஒரு சில தினங்களில் அரசமைப்பு வழிகாட்டல் குழுவின் அங்கத்தவர்களுக்கு அனுப்புவதற்கு நேற்று நடைபெற்ற வழிகாட்டல் குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

அடுத்த மாதம் மே மாதம் 3, 4 ஆம் திகதிகளில் நடைபெறும் அரசமைப்பு வழிகாட்டல் குழுவின் அடுத்த கூட்டத்தில் அந்த இடைக்கால அறிக்கையை இறுதி செய்து, அதனை அரசமைப்பு நிர்ணய சபையாகச் செயற்படும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது எனவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அரசமைப்பு வழிகாட்டல் குழு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமையும், நேற்று புதன்கிழமையும் கூடி ஆராய்ந்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பெரும்பாலும் அனைத்துத் தரப்பினரும் பங்குபற்றினர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மட்டும் பங்குபற்றினார். அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா பங்குபற்றவில்லை. மறுநாள் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ஜே.வி.பி. பிரதிநிதிகள் பங்குபற்றவில்லை.

பொது எதிரணியின் உறுப்பினர்களான தினேஷ் குணவர்த்தன, பிரசன்ன ரணதுங்க ஆகிய இருவரும் இரண்டு நாட்களும் கலந்துகொண்டனர்.

அதிகாரப் பரவலாக்கல், நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறைமை ஒழிப்பு, தேர்தல் சீர்திருத்தம் ஆகியவை தொடர்பாகப் பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு, இணங்காணப்பட்ட அம்சங்களை உள்ளடக்கிய இடைக்கால அறிக்கைக்கான நகல் வடிவம் ஒன்று அரசமைப்பு வழிகாட்டல் குழுவின் செயலகத்தில் ஏற்கனவே தயார் நிலையில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. அதில் தேவையான உள்செலுத் துகைகளைச் செய்த பின்னர், அரசமைப்பு வழிகாட்டல் குழு வின் அங்கத்தவர்களுக்கு அடுத்து வரும் தினங்களில் அவற்றை அனுப்பி வைக்குமாறு அரசமைப்பு வழிகாட்டல் குழுவின் செயலகத்துக்கு வழிகாட்டல் குழுவின் தலைவர் என்ற முறையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தின்போது பணித்தார்.

வழிகாட்டல் குழுவின் கூட்டத்தை அடுத்த மாதம் 3, 4 ஆம் திகதிகளில் நடத்தவும், புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையை அப்போது இறுதி செய்து முடிக்கவும், அதன் பின்னர் அரசமைப்பு நிர்ணய சபைக்கு அதைச் சமர்ப்பிக்கவும் நேற்று நடைபெற்ற அமர்வில் தீர்மானிக்கப்பட்டது.

தற்போதைய வழிகாட்டல் குழுவின் கூட்டத்தை நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமையிலிருந்து இன்று வியாழக்கிழமை வரையான மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து நடத்துவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், இடைக்கால அறிக்கையின் நகல் வடிவத்தை எட்டுவதில் இருந்த சிக்கல்கள் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசித் தீர்மானிக்கப்பட்டுவிட்டதால், இன்று வியாழக்கிழமை அமர்வை நடத்துவதில்லை என்றும் நேற்று முடிவு செய்யப்பட்டது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …