Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / தமிழ்க் கூட்டமைப்புடன் இணைந்து கூட்டரசமைப்பது நாட்டுக்கு ஆபத்து! – இப்படிக் கூறுகின்றது சு.க.

தமிழ்க் கூட்டமைப்புடன் இணைந்து கூட்டரசமைப்பது நாட்டுக்கு ஆபத்து! – இப்படிக் கூறுகின்றது சு.க.

“ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து கூட்டரசமைப்பது நாட்டுக்குப் பெரும் ஆபத்தாக அமையும். அத்துடன், அது ஸ்திரமற்ற அரசியல் நிலைமையையே தோற்றுவிக்கும்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்தது.

இவ்விடயம் உட்பட மேலும் சில காரணிகளைக் கருத்தில்கொண்டே தேசிய அரசமைக்கும் முடிவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்தது என்று அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“பொதுத்தேர்தலின்போது தனியாட்சி அமைப்பதற்கு இரண்டு பிரதான கட்சிகளுக்கும் மக்கள் ஆணை வழங்கவில்லை. இதையடுத்தே தேசிய அரசமைக்கும் நிலைமை ஏற்பட்டது. இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களிடம் கட்சித் தலைவர் என்றவகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட முறையில் கருத்துகளைக் கோரினார். 42 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து மத்திய குழுவும் அங்கீகாரம் வழங்கியது. எனவே, தற்போது தேசிய அரசில் அங்கம் வகிப்பவர்களெல்லாம் விரும்பி வந்தவர்களே தவிர, அழுத்தங்களால் சேர்ந்தவர்கள் அல்லர் என்பதைக் கூறியாகவேண்டும்.

பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 106 ஆசனங்கள் கிடைத்தன. இந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் முழுமையாக எதிர்வரிசையில் அமர்ந்திருந்தால் பெரும்பான்மையைப் பெற்று தனித்து ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிக்கும்.

அக்கட்சியுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு ஜே.வி.பி. முன்வந்திருக்குமா எனத் தெரியவில்லை. எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுகள் நடத்தப்பட்டிருக்கலாம். அதுவே மாற்றுவழியாக இருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நடுநிலையானவர்கள் இருப்பதுபோல், பிரிவினைவாதிகளும் இருக்கின்றனர். எனவே, தேசிய அரசமைப்பதற்கு அவர்கள் வெறுமனே வரமாட்டார்கள். நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டிருக்கலாம். அரசமைப்பு சபையில் அவர்கள் கேட்பவற்றைப் பார்க்கும்போது, எவ்வாறானவற்றை கேட்டிருப்பார்கள் என்பதை ஊகிக்கமுடிகின்றது.

விரும்பியோ, விரும்பாமலோ இதற்கு இணக்கம் தெரிவிக்கவேண்டியநிலை ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்டிருக்கும். ஆட்சி அதிகாரத்தை இழக்க எவரும் விரும்பமாட்டார்கள். அப்படியொரு நிலை ஏற்பட்டால் நாட்டில் ஸ்திரமற்ற அரசியல் நிலைமையே நீடித்திருக்கும். 19ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் நான்கரை வருடங்களுக்கு நாடாளுமன்றத்தை ஜனாதிபதியால் கலைக்கமுடியாது. எனவே, இது நெருக்கடியாக அமைந்திருக்கும்.

ஆகவே, நாட்டில் ஸ்திரத்தன்மை உட்பட மேலும் சில காரணிகளைக் கருதியே தேசிய அரசுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது” – என்றார்.

“டிசம்பரில் சு.க. தேசிய அரசிலிருந்து வெளியேறினால் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைக்கவேண்டிய நிலைதானே ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்படும். அப்போது என்ன செய்வீர்கள்?” எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு,

“டிசம்பரில் உடன்படிக்கை முடிவடைகின்றது. அதன்பின்னரே முடிவெடுக்கப்படும். மக்களின் விருப்பத்தின் பிரகாரம் தீர்மானங்கள் எடுக்கப்படும். கூட்டமைப்புடன் இணைந்து கூட்டரசு அமைப்பது நாட்டுக்கு ஆபத்து என்பதுடன், அரசியல் ஸ்திரத்தன்மை இருக்காது” என்று பதிலளித்தார் அமைச்சர் மஹிந்த சமரசிங்க.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …