Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கிழக்கின் முதல்வராக தமிழர் வரவேண்டும்! – கூட்டமைப்பு எம்.பி. ஸ்ரீநேசன் ஆதங்கம்

கிழக்கின் முதல்வராக தமிழர் வரவேண்டும்! – கூட்டமைப்பு எம்.பி. ஸ்ரீநேசன் ஆதங்கம்

“தமிழர் ஒருவரே கிழக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சராக வரவேண்டும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

“நடப்பு மாகாண சபையில் தமிழ்பேசும் இனத்தவர்கள் என்ற அடிப்படையில் முஸ்லிம் இனத்துக்கு முதலமைச்சர் பதவியை கிழக்குத் தமிழ் மக்கள் விட்டுக்கொடுத்திருந்தனர். எனவே, விரைவில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் முதலமைச்சருக்கு வழிவிடவேண்டிய தேவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் எமது சகோதர முஸ்லிம் மக்களுக்கும் இருக்கின்றது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நிறைவடையவுள்ளது. இந்நிலையில், அந்த மாகாண சபைக்குரிய தேர்தல் விரைவில் நடைபெறுவதற்குரிய சாத்தியங்கள் காணப்படுகின்றன. அந்தவகையில் கிழக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வியும் தற்போது எழுந்துகொண்டிருக்கின்றது.

இதில் நாம் குறிப்பிட விரும்புவது என்னவென்றால், மூவின மக்களையும் கொண்டுள்ள கிழக்கு மாகாணத்தில் 40 வீதத்துக்கு அதிகமாக தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்றனர். இருந்தும்கூட நடப்பு மாகாண சபையில் நல்லிணக்கமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் 11 ஆசனங்களைப் பெற்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது 7 ஆசனங்களை மாத்திரம் பெற்றிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு விட்டுக்கொடுப்பை மேற்கொண்டு முதலமைச்சர் பதவியை எமது சகோதர முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவருக்கு கொடுத்திருந்தது. அதாவது, தமிழ்பேசும் இனத்தவர்கள் என்ற அடிப்படையில் முஸ்லிம் இனத்துக்கு முதலமைச்சர் பதவியை கிழக்குத் தமிழ் மக்கள் விட்டுக்கொடுத்திருந்தனர்.

எனவே, இனி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் முதலமைச்சருக்கு வழிவிடவேண்டிய தேவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் எமது சகோதர முஸ்லிம் மக்களுக்கும் இருக்கின்றது.

நடப்பு மாகாண சபையில் எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் முஸ்லிம் முதலமைச்சரை நியமிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், கிழக்கு தமிழ் மக்களும் முழுமையான ஆதரவை வழங்கியமையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், எமது சகோதர முஸ்லிம் மக்களும் கவனத்தில்கொள்ள வேண்டும். அடுத்த மாகாண சபையில் இந்த விட்டுக்கொடுப்பை முஸ்லிம்கள் செய்ய வேண்டும் என்ற தார்மீகப் பொறுப்பை இவர்களுக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஒப்படைத்திருக்கின்றார்கள். எனவே, எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத்
தேர்தலில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரவேண்டும் என நாம் எதிர்பார்ப்பதில் தவறில்லை. இதில் மாற்றுக் கருத்துகள் இருக்கக்கூடாது.

அடுத்த முறை தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரவேண்டும் என்ற கிழக்குத் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை கனவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் கிழக்கு முஸ்லிம்களும் நனவாக்கவேண்டும். விட்டுக்கொடுப்புடன் இவர்கள் இதனைச் செய்வார்கள் என்ற நம்பிக்கை ஒட்டுமொத்த தமிழ் மக்களிடமும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமும் இருக்கின்றது” – என்றார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …