உரிமைகளை பெறும் நாளிலேயே உண்மையான விடுதலை கிடைக்கும்: சந்திரநேரு சந்திரகாந்தன்

தமிழ் மக்களுக்காக அனைவரும் ஒன்றிணைந்து உரிமைகளை பெற்றுக் கொள்ளும் நாளிலேயே உண்மையான விடுதலைக்கான பயணம் ஆரம்பிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் இன்றையதினம் (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“”ஏழு கோடி உலகத் தமிழர்களையும் அவர்களின் உரிமைகளையும் அழித்த தடயமாக மே 18 முள்ளிவாய்க்கால் தினமுள்ளது. எப்பொழுது சர்வதேசமும் இலங்கை அரசும் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதை ஒத்துக் கொள்கிறதோ அன்றுதான் மே 18 இன் உண்மையான அர்த்தம் உயிரோட்டமானதாக உருப்பெறும்.

எப்போது நாங்கள் ஒரு குடையின் கீழ் கட்சிகள், அமைப்புக்கள் என வேறுபாடின்றி ஒற்றுமையுடன் எமது மக்களுக்கான உரிமையைப் பெற்றெடுக்கின்றோமோ, அன்றுதான் எமது தமிழ் மக்களுக்கு உண்மையான விடுதலை நோக்கியதான பயணம் அமையும்.

எங்களது தவறுகளைத் திருத்தி நேர்கோட்டில் பயணித்து ஒருமித்துக் குரல்கொடுக்கின்ற செயற்பாட்டில் ஈடுபட வேண்டும். வெறுமனே விளக்கேற்றுவதனால் இழப்புக்களைச் சுமந்த மக்களின் ஆத்ம சாந்தியை அடைந்து விடமுடியாது” என சந்திரநேரு சந்திரகாந்தன் மேலும் தெரிவித்தார்.

About தமிழ்மாறன்

View all posts by தமிழ்மாறன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *