Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஈழத்தின் மாபெரும் ஊடகப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு!

ஈழத்தின் மாபெரும் ஊடகப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு!

ஈழத்­தின் மாபெரும் ஊட­கப் படுகொலை நிகழ்ந்த 11ஆவது ஆண்டு நினைவு நாள் நேற்றாகும். ‘சுடர் ஒளி’யின் சகோதரப் பத்திரிகையான ‘உதயன்’ நிறுவனத்துக்குள் புகுந்த ஆயுததாரிகளினால், ஊழியர்கள் இருவர் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்ட நாளான நேற்று ஊடக சுதந்திர தின நிகழ்வு நடைபெற்றது. ‘உதயன்’ பத்திரிகை நிறுவனத்தில் நேற்று இந்த நிகழ்வு இடம்பெற்றது.

2006ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம், கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள ‘உதயன்’ பத்திரிகை நிறுவனத்துக்குள் புகுந்த ஆயுததாரிகள் ஊழியர்கள் இருவரைக் கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றனர். மேலும், மூவரைக் காயப்படுத்தினர். பெரும் தொகைச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தனர். எனினும், இதுவரையில் இந்தக் குற்றங்களைச் செய்த எவரும் தண்டிக்கப்படவேயில்லை.

ஈழத்தின் மாபெரும் ஊடகப் படுகொலை இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கொடூர நாளில் தமிழ் ஊடகங்கள் மற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை மற்றும் வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும் ‘உதயன்’ பத்திரிகை நிறுவனம் வருடாந்தம் நடத்தி வரும் ‘வேட்கை’ நிகழ்வு நேற்று முற்பகல் 9 மணியளவில் ‘உதயன்’ பத்திரிகை அலவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

‘உதயன்’ – ‘சுடர் ஒளி’ குழுமத் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கலந்துகொண்டார்.

ஊடகத்துறைக்காக உயிர்நீத்த உத்தமர்கள் இந்த நிகழ்வில் நினைவுகூரப்பட்டனர்.

பொதுச் சுடரினை நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் ஏற்றிவைக்க, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் திருவுருவப்படங்களுக்கு அவர்களின் உறவினர்கள், நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்த விருந்தினர்கள் மற்றும் பத்திரிகைப் பணியாளர்கள் என அனைவரும் சுடரேற்றியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், விந்தன் கனகரத்தினம், பா.கஜதீபன், அ.பரஞ்சோதி, வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் எஸ்.சுகிர்தன் மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் உறவினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …