சிறுவர்கள் – பெண்கள் மீதான வன்முறைகள் குறைவடைந்துள்ளன: மட்டு. பிரதி பொலிஸ்மா அதிபர்

மட்டக்களப்பில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள் குறைவடைந்துள்ளதாக மட்டக்களப்பு பிரதி பொலிஸ்மா அதிபர் ஜாகொட ஆராச்சி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – வாகரை பொலிஸ் நிலையத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகத்துக்கான தனியான அலுவலகம் இன்று (திங்கட்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு அவர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் ”சிறுவர்கள் மற்றும் பெண்களின் சமூக நிலைமையை மேம்படுத்துவதற்காக நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

அந்த வகையில் வாகரையில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் விவகாரங்களைக் கையாள்வதற்காக தனியான செயலகம் அமைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கெதிராக இடம்பெறும் வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து தயக்கம் காட்டும் சூழ்நிலையை மாற்றியமைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே புதிய அலுவலகத்திற்கு வருகை தந்து அச்சமின்றி சுதந்திரமாக தமது முறைப்பாடுகளை கூற முடியும்.

கடந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக 42 முறைப்பாடுகள் பதிவாகி உள்ள நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 7 முறைப்பாடுகளே பதிவாகியுள்ளன” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

About தமிழ்மாறன்

View all posts by தமிழ்மாறன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *