Monday , October 20 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / காணிகளில் இராணுவம்! வீதிகளில் தமிழ் மக்கள்!! – ஐ.நாவின் அகதிகளுக்கான தூதரகப் பணிப்பாளரிடம் விக்கி சுட்டிக்காட்டு

காணிகளில் இராணுவம்! வீதிகளில் தமிழ் மக்கள்!! – ஐ.நாவின் அகதிகளுக்கான தூதரகப் பணிப்பாளரிடம் விக்கி சுட்டிக்காட்டு

“வடக்கில் தமிழ் மக்களின் காணிகள் பலவற்றில் இராணுவத்தினர் இன்னமும் உள்ளனர். அந்த மக்களோ வீதிகளில் அமர்ந்திருந்து தமது சொந்த மண்ணை மீட்பதற்காகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த அவல நிலைக்கு உடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.”

– இவ்வாறு ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான தூதரகப் பணிப்பாளர் டெய்ஜி டெலிடம் தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

“தமிழ் மக்களுடைய காணிகளில் இராணுவம் இருப்பதால், வடக்கில் அகதி வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ். மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான தூதரகப் பணிப்பாளர் தலைமையிலான குழுவினர், வடக்கு மாகாண முதலமைச்சரை அவரது செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு மாகாணத்தில் இராணுவத்தினர், மக்களின் காணிகளை விட்டுச் சென்றால் மாத்திரமே, மக்கள் தமது காணிகளுக்குச் செல்லும் நிலை ஏற்படும். அத்துடன் வடக்கில் அகதி வாழ்க்கைக்கும் முடிவுகட்ட முடியும்.

இந்தியாவில் இருந்தும் மக்கள் வருகை தந்துகொண்டிருக்கின்றார்கள். எமது நாட்டு மக்கள் எமது நாட்டுக்கு திரும்பி வருவதை வரவேற்கின்றோம். ஆனால், அவர்களுக்குரிய வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். அவ்வாறு நாட்டுக்குத் திரும்பி வரும்போது, அவர்களின் காணிகள் வேற்று இன மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலைமை காணப்படுகிறது. இதனால், அவர்கள் பெரும் பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றார்கள். குடியமர்த்தியவர்களை வெளியேற்றாமல், அம்மக்களுக்கு மாற்றுக்காணி தருவதாகக் கூறி வருகின்றார்கள். இவை அனைத்தும், அவர்களுக்கு பலவிதமான பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொடுக்கின்றது.

நாட்டில் அகதிகள் இல்லாத நிலை ஏற்படுகின்றதா என்பது பற்றி, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான தூதரகம் அவதானிக்க வேண்டும். இந்தியாவில் இருந்து வருகை தரும் இலங்கை அகதிகளுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்க, ஐக்கிய நாடுகள் அலுவலகமும் முன்வர வேண்டும்” – என்றார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …