பிரதமராகும் வாய்ப்பு மஹிந்தவுக்கே உண்டு – சித்தார்த்தன்
மஹிந்த ராஜபக்ஷவே மீண்டும் பிரதமராக வர அதிகம் வாய்ப்புள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வில் இதனை தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்
“இம்முறை தேர்தலில் மிக பெரும்பான்மையாக மஹிந்த தரப்பினர் வருவார்கள். மூன்றில் இரண்டு பெறும்பான்மையைப் பற்றிக் கதைத்தாலும் அவர்களுக்கு 120 – 130 வரையான ஆசனங்கள் கிடைக்கும் என நம்புகின்றார்கள்.
இருந்தாலும் அவர்கள் அரசியல் அமைப்பின் 19வது திருத்ததை இல்லாமல் செய்வதுடன், அவர்களின் கட்சியில் உள்ள விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் 13ம் திருத்தச் சட்டத்தையும் இல்லாமல் ஆக்கும் நோக்கத்துடன் இருப்பவர்கள்.
ஆனாலும், இந்தியா ஒரு போதும் இதற்கு அனுமதிக்காது. இப்படியான சூழலில் தமிழ் பிரதிநிதித்துவத்தை குறைத்துவிட வேண்டும் என்ற நோக்கில் பல கட்சிகள் வடக்கு கிழக்கில் இறக்கிவிடப்பட்டுள்ளார்கள். அரசாங்கத்தைச் சேர்ந்த கட்சிகளே பல கட்சிகளாக தேர்தலில் வாக்குக் கேட்கின்றார்கள்.” – என்றார்.