Friday , November 22 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / யாழ். பல்கலை மாணவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

யாழ். பல்கலை மாணவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகிடிவதை தொடர்பில் 12 மாணவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.

குறித்த பகிடிவதையானது சமூக வலைத்தளங்களில் வௌியானவாறு பாலியல் ரீதியில் புரியப்பட்டதற்கான ஆதாரங்கள் எவையும் கண்டறியப்படவில்லை என யாழ். பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பகிடிவதை குறித்த ஆரம்ப விசாரணை தொடர்பான ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறித்து தௌிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஆரம்ப விசாரணை குறித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பதிவாளரினால் ஊடக அறிக்கையொன்று வௌியிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், பகிடிவதை குறித்த செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராயவும் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்களை அடையாளம் காண்பதற்காகவும் ஐவரடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7ஆம் திகதி முதல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், 7 தடவைகள் மாணவர்களை சந்தித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

அத்துடன், குழுவின் பரிந்துரையுடன் சில கையடக்கத் தொலைபேசி இலக்கங்களை பொலிஸ் நிலையத்தினூடாக தேசிய சைபர் பாதுகாப்பிற்கான நிலையத்துக்கு (National Centre for cyber security) அனுப்பியதாக பல்கலைக்கழகம் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழுவின் பூர்வாங்க விசாரணை 16 ஆம் திகதி முடிவுறுத்தப்பட்டதுடன் அதன் அறிக்கை கடந்த 18 ஆம் திகதி தகுதிவாய்ந்த அதிகாரியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Whatsapp உரையாடல் மூலம் சிரேஷ்ட மாணவர்கள், கனிஷ்ட மாணவர்கள் என்ற படிநிலையை பீடத்தில் அமுல்படுத்தும் நிலையிலான பகிடிவதைகள் இடம்பெற்றுள்ளதாக விசாரணை அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

தொழில்நுட்பப் பீடத்தின் மூன்றாம் அணி மாணவர்களே இதில் ஈடுபட்டுள்ளனமையும் இதனூடாக தெரியவந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானதன் பின்னர் விசாரணைகளுக்கு இடையூறு செய்யும் வகையிலான அல்லது கனிஷ்ட மாணவர்களை அச்சுறுத்தும் வகையிலான குறுஞ்செய்திகளும் ஒலிப்பதிவு செய்யப்பட்ட செய்திகளும் Whatsapp உரையாடல்களில் சிரேஷ்ட மாணவர்களால் கனிஷ்ட மாணவர்களுக்குப் பகிரப்பட்டுள்ளன.

இந்த காரணங்களை அடிப்படையாகக் கொண்டு மேலதிக விசாரணைகளுக்குத் தடை ஏற்படாத வகையில், 6 மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைவதற்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டதுடன், 6 மாணவர்கள் மேற்படி விடயங்களுக்கு உடந்தையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது.

இதனால் 12 மாணவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டு விசாரணை நடைபெறவுள்ளதாகவும் யாழ். பல்கலைக்கழகத்தினால் வௌியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சமூக வலைத்தளங்களில் முதலாவதாக வெளியாகிய சில கையடக்கத் தொலைபேசி இலக்கங்களை உடைய பெரும்பாலான மாணவர்கள் இந்த விடயத்தில் தங்களை ஈடுபடுத்தாதவர்கள் என்பது குறித்த விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனினும் பொலிஸ் நிலையத்தினூடாக அந்த இலக்கங்கள் தொடர்பாக இடம்பெற்ற உரையாடல்களின் தகவல்களை பெற்றுத்தருமாறு தேசிய சைபர் பாதுகாப்பிற்கான நிலையத்திடம் கோரப்பட்டுள்ளது.

அத்துடன், சமூக வலைத்தளங்களில் வெளியான கையடக்கத் தொலைபேசி இலக்கங்கள் மூலமோ நிழற்படங்கள் மூலமோ அடையாளம் காணப்படாத மாணவர்கள் குறித்த பகிடிவதை உரையாடல்களில் தொடர்புபட்டமைக்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த விடயத்துடன் தொடர்புபடாத மாணவர்களுக்கு பல்வேறு தரப்பினராலும் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சில சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராயுமாறு பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகம் தமது ஊடக அறிககையூடாக குறிப்பிட்டுள்ளது.

விதிமுறைகளுக்கு அமைவாக எவரேனும் குற்றமிழைத்திருப்பின் குறித்த மாணவர்களை அடையாளம்கண்டு அவர்களுக்கு எதிராக பல்கலைக்கழகம் சட்ட நடவடிக்கை எடுக்கும் எனவும் அதுவரையில் ஒத்துழைப்பு வழங்குமாறும் பல்கலைக்கழகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

குறித்த பகிடிவதைச் செயற்பாடானது கையடக்கத் தொலைபேசி உரையாடல்கள் மூலமாகவே இடம்பெற்றிருப்பதால் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவுசெய்யப்படும் மாணவர்களது பெற்றோர் இது தொடர்பில் விழிப்பாகச் செயற்படுமாறும் பல்கலைக்கழகம் வலியுறுத்தியுள்ளது.

 

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv