“தொடர் அமைதிவழிப் போராட்டத்தின் மூலம் மக்கள் பெற்ற பலத்தைப் பிரயோகித்து விரைவில் காணிகள் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இல்லாதுபோனால் நாங்களும் மக்களாகிய உங்களுடன் இணைந்து அரசுக்கு எதிராகவும், இராணுவத்துக்கு எதிராகவும் போராடுவோம்.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
கேப்பாப்பிலவில் உள்ள பூர்வீக நிலங்களான 138 குடும்பங்களுக்குச் சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்கக் கோரி மக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் அமைதிவழிப் போராட்டக் களத்துக்கு நேற்றுக் காலை 10 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா சென்று மக்களுடன் கலந்துரையாடினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“போர் காரணமாக இடம்பெயர்ந்து இன்றும் அகதியாக வாழ்ந்து வரும் எமது துன்பங்களை உங்களுக்குச் சொல்ல வேண்டியது இல்லை. உங்களுக்கு எல்லாம் புரியும். சுடலைக்கு அருகில் இரவு பகலாக பெண்கள், குழந்தைகள் எனப் பலரும் இருந்து எமது சொந்த நிலத்துக்காகப் போராடி வருகின்றோம். எங்கள் காணிகளுக்குள் நாங்கள் மீள்குடியேறுவதை எங்கள் மக்கள் பிரதிநிதிகள் அரச தரப்பினருடன் கலந்துரையாடி விரைவில் வழிசெய்ய வேண்டும். இது தொடர்பில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இறுக்கமான – கடும் அழுத்தம் கொடுக்கவேண்டும்” என்று போராட்டத்தில் பங்கேற்றுள்ள கேப்பாப்பிலவு மக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் வலியுறுத்தினார்கள்.
இதற்கு அவர் பதிலளிக்கும்போது,
“எங்கள் மக்களின் காணிப் பிரச்சினை முக்கியமானது. எங்கள் மக்களின் மீள்குடியேற்றம் முக்கியமானது. அதன் அடிப்படையில் கேப்பாப்பிலவு மக்களாகிய நீங்கள் விரைவில் உங்கள் சொந்தக் காணிகளுக்குத் திரும்ப வேண்டும். ஏற்கனவே பிலக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்த போராட்டத்தையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் காணிகளை உடன் விடுவிக்குமாறு நாடாளுமன்றத்திலும், ஜனாதிபதியிடமும் மிக இறுக்கமாகச் சொன்னதன் பின்னர் அந்த நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. அதே பலத்தை நீங்கள் கொண்டுள்ளீர்கள். நாங்கள் அந்தப் பலத்தைப் பிரயோகிப்போம். ஜனாதிபதியிடம் மீண்டும் மிகத் திட்டவட்டமாக எடுத்துக்கூறி இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டுவோம். கேப்பாப்பிலவு காணிகள் மட்டுமல்ல இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் பேசும் மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என்று நல்லாட்சி அரசு எமக்குத் தந்த உறுதிமொழி இருக்கின்றது. நீங்கள் சொல்லுகின்ற ஆவேசமான கருத்துக்களை நாங்கள் இதைவிட அதிகமான – பலமான ஆவேசத்துடன் ஜனாதிபதியிடம் எடுத்துச் சொல்லுவோம். நீங்கள் விரைவில் உங்கள் சொந்த இடத்துக்குச் செல்ல வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இல்லாதுபோனால் நாங்களும் மக்களாகிய உங்களுடன் இணைந்து அரசுக்கு எதிராகவும், இராணுவத்துக்கு எதிராகவும் போராடுவோம். உங்கள் மீள்குடியேற்றம், உங்களுடைய பாதுகாப்பு, பெண்களின் பாதுகாப்பு, அவர்களின் எதிர்கால வாழ்க்கை எல்லாவற்றையும் கட்டியெழுப்புவதற்கு முழுமையாக உங்களுடன் நாம் இருப்போம்” – என்றார்.