இந்து சமய பாடத்திட்டத்திலுள்ள குறைபாடுகளை திருத்த விசேட குழு
இந்து சமய பாடத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை திருத்தி அமைக்கும் வகையில் புதிய குழு ஒன்றை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்
இந்து சமய பாடத்திட்டத்தில் உள்ள குறைபாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று கல்வி இராஜாங்க அமைச்சின் கேட்போர் கூட மண்டபத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவாநந்தா கல்வி அமைச்சின் தமிழ் மொழி பணிப்பாளர் சு.முரளிதரன் கல்வி அமைச்சின் வெளியீட்டு தினைக்களத்தின் பிரதி ஆணையாளர் லெனின் மதிவானம், பேராசிரியர்களான சி.பத்மநாதன், சி.தில்லைநாதன், ப.புஸ்பரட்ணம், கிருஸ்ணராஜா, ஏ.என்.கிருஸ்ணவேனி, டாக்டர்.க.இரகுவரன் ஒய்வுபெற்ற ஆசிரியர்கள் கல்வி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதன்போது இந்து சமய பாடத்திட்டத்தில் ஆண்டு ஒன்று முதல் ஆண்டு 11 வரையான பாடத்திட்டத்தில் மாணவர்களின் தகுதிக்கு அப்பாற்பட்ட பல விடயங்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக நிபுணத்துவம் பெற்ற பலர் தனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவாநந்தாவும் கருத்து தெரிவித்ததாக சுட்டிக்காட்டிய அவர், ஒரு முறையான ஏற்பாட்டை மேற்கொள்ளும் வகையில் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்து சமய பாடத்திட்டத்தில் மாணவர்களின் தகுத்திக்கு அப்பாற்றபட்ட பல விடயங்கள் உள்வாங்கப்பட்டுள்ளமையால் இந்து சமயத்தை கற்பதில் மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.
இந்த நிலைமை தொடருமானால் மாணவர்கள் எதிர்காலத்தில் இந்து சமயம் தொடர்பான கற்கைக்கு முக்கியத்துவம் வழங்கமாட்டார்கள் . அவர்களுக்கு இந்த பாடத்திட்டம் மீது ஒரு வெறுப்பு ஏற்பட்டுவிடும். எனவே அதற்கு இடமளிக்க முடியாது என கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்து சமய பாடத்தை மாணவர்கள் விரும்பி கற்கும் வகையில் ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்.
எனவே இது தொடர்பாக கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை மேற்கொள்ளும் வகையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி இது தொடர்பான அனைத்து துறைசார்ந்தவர்களையும் அழைத்து கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.