கால அவகாசம் வழங்கப்பட்டால் தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்! – நல்லிணக்க செயலணி நம்பிக்கை
“இலங்கை அரசுக்குக் கால அவகாசம் வழங்குவதன் மூலமே தீர்மானத்தில் உள்ள ஏனைய விடயங்களையும் நடைமுறைப்படுத்த முடியும். அரசுக்கு இந்தக் காலப் பகுதியில் அழுத்தங்களைப் பிரயோகித்து பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடியும்.”
– இவ்வாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் தெரிவித்தார் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் நல்லிணக்க செயலணியின் செயலாளருமான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து.
ஜெனிவா வளாகத்தில் நேற்று நடைபெற்ற நல்லிணக்க செயலணியின் அறிக்கை தொடர்பான சிறப்பு உபகுழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த சிறப்பு உப குழுக் கூட்டத்தில் நிமால்கா பெர்ணான்டோ உள்ளிட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்கள், தமிழ்த் தரப்பு பிரதிநிதிகள், புலம்பெயர் அமைப்பின் பிரதிநிதிகள், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிககள், அரசசார்பற்ற நிறுவன மற்றும் சிவில் சமூக தலைவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் கலந்தாலோசனை செயற்பாட்டில் ஈடுபட்ட ஜே.மஜித் உப குழு கூட்டத்தில் உரையாற்றுகையில்,
“கலந்தாலோசனை அமர்வுகளை நடத்தியபோது மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மை காணப்பட்டது. கசப்பான அனுபவங்கள் அவர்கள் மனதில் இருந்தன. கடந்த காலங்களில் ஆணைக்குழுக்களின் அறிக்கைகளுக்கு எதுவும் நடக்காமையே இதற்கு காரணமாகும்.
முஸ்லிம் மக்களின் நிலைமையை எடுத்துப் பார்த்தால், அவர்கள் இந்தப் போரில் இணையாவிட்டாலும் முஸ்லிம்களுக்கான நீதி நிலைமாற்று கால நீதியில் வராது என்றதொரு கருத்து நிலவுவதை நாங்கள் பார்க்கக் கூடியதாக இருந்தது. இறுதியில் நாங்கள் அறிக்கையைக் கொண்டு வந்தோம். எவ்வாறெனினும் இந்தக் காலப்பகுதியில் சில தடைகளை நாங்கள் அவதானித்தோம்.
கலந்தாலோசனை செயற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றபோது நாடாளுமன்றத்தில் காணாமல்போனோர் அலுவலகம் அமைக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது மக்கள் மத்தியில் சிக்கலான நிலையைத் தோற்றுவித்தது. எமது அறிக்கை வெளிவந்ததும் மக்கள் அதில் திருப்தியடைந்தனர்” – என்றார்.