போரின்போது இலங்கைப் படைக்கு சீனா வழங்கிய பங்களிப்புக்கு மைத்திரி பாராட்டு!
“இலங்கைப் படையினருக்குத் தேவையான பயிற்சிகளை சீன அரசு தொடர்ந்தும் வழங்கவேண்டும்” என்று அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீனப் பாதுகாப்பு அமைச்சரும் அரச ஆலோசகருமான ஜெனரல் சேன்ங் வான்குவாங், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்டகாலமாக இருந்துவரும் உறவுகளை இதன்போது நினைவுகூர்ந்த ஜனாதிபதி மைத்திரி, இலங்கையின் இறைமைக்கும் தேசிய பாதுகாப்புக்கும் சீனாவிடமிருந்து கிடைக்கும் உதவிகளுக்குப் பாராட்டும் தெரிவித்தார்.
நீண்டகாலமாக இலங்கையின் பாதுகாப்புப் படையினருக்கு சீன அரசு வழங்கிவரும் பயிற்சி சந்தர்ப்பங்கள் தொடர்பில் நன்றி தெரிவித்த ஜனாதிபதி மைத்திரி, உள்நாட்டுப் போரின்போது சீனா வழங்கிய ஒத்துழைப்புகளுக்குப் பாராட்டும் தெரிவித்தார்.
இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்குத் தேவையான பயிற்சிகளைத் தொடர்ந்தும் சீன அரசு வழங்கும் எனத் தான் நம்புவதாகவும் சீன பாதுகாப்பு அமைச்சரிடம் மைத்திரி குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வான்குவாங், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் மக்கள் நலன்பேணல் பலமான நிலையில் உள்ளது. இது சீன அரசுக்கு மகிழ்ச்சியளிக்கின்றது” என்றார். அத்துடன், சீன ஜனாதிபதியின் சார்பில் வாழ்த்துகளையும் தெரிவித்துகொண்டார்.
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 60 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இந்த உறவுகளை மேலும் பலப்படுத்துவது தனது நாட்டின் நோக்கமாகும் என்றும் சீனப் பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.