Sunday , December 22 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / பொறுப்பற்று வேற்றுமையில் மூழ்கியுள்ள பொறுப்புள்ளவர்கள்

பொறுப்பற்று வேற்றுமையில் மூழ்கியுள்ள பொறுப்புள்ளவர்கள்

“மக்கள் போராட்டம் வெடிக்கும்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா அவ்வப்போது கூறுவது உண்டு.

நிலமீட்புப் போராட்டம், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம், நுண்நிதிக் கடனைத் தடை செய்யக் கோரும் போராட்டம் எனப் பல போராட்டங்கள் நாளாந்தம் வடக்கு, கிழக்கில் நடைபெற்று வருகின்றன. அவற்றில் சில, வருடத்தைக் கடந்தும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அதன் வரிசையில், தமிழர் பிரதேசங்களின் கடல் பிரதேசத்தைப் படையினரின் ஆசீர்வாதத்துடன் ஆக்கிரமித்து, கடற்செல்வத்தை அள்ளிச் செல்லும் தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்றக் கோரும் போராட்டமும் அண்மையில் இணைந்து கொண்டது.

அவ்வகையில், யாழ். வடமராட்சி கிழக்கில் முகாமிட்டிருப்போரை வெளியேற்றக் கோரி, குடாநாட்டில் கடையடைப்பு, ஆர்ப்பாட்டப் பேரணி, மகஜர் கையளிப்பு எனப் பல விடயங்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறாக இடம்பெறும் போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவுக்கு எதிராக, அங்கு குரல்கள் ஒலித்துள்ளன.

1948 முதல் தொடர்ச்சியாக நாட்டை மாறி மாறி ஆளுகின்ற பெரும்பான்மை அரசாங்கங்களால், தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்ற அவல நிலை நீடிக்கின்றது. தமிழர்கள் முதலில் ஆட்சியாளர்களை நம்புவதும் பின்னர் ஏமாறுவதும் முடிவின்றித் தொடர்கின்றது.

கடந்த 2015இல் ஆட்சிக்கு வந்த நல்லாட்சியில், தமக்கு மீட்சி கிடைக்கும் எனத் தமிழ் மக்கள் திடமாக நம்பினர். ஆனால், அண்மைக் காலங்களாக வழமை போலவே, ஆட்சியாளர்களின் முகமுடிகள் விலகத் தொடங்கி விட்டன. மொத்தத்தில், நம்பிக்கைகள் தகர்த்தெறியப்பட்டு விட்டன.

ஆனாலும், பாரிய பொறுப்புகளைக் கொண்ட தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இவற்றையெல்லாம் வெறும் பார்வையாளர்கள் போல, பார்த்துக் கொண்டிருக்கின்றார்களா எனத் தமிழ் மக்கள் எண்ணம் கொள்ளத் தொடங்கி விட்டார்கள்.

அதன் பிரதிபலிப்பைத் தமிழ் மக்கள் பல வடிவங்களில் காண்பித்தும் வருகின்றனர். அதன் ஒரு விம்பமாகக் கூட, மாவைக்கு எதிரான கண்டனங்களைக் கருதலாம்.

புலிகள் போல, அரசாங்கத்துக்கு ஈடான, உயர்ந்த, வலுவான, இரு தரப்பும் சமமான நிலையில் பேச்சுவார்த்தை மேசையில் பேரம் பேசுவதற்குக் கூட்டமைப்பினால் முடியாது எனத் தமிழ் மக்கள் நன்கறிவர்.

ஆனாலும், கூட்டமைப்பினரின் இணக்க அரசியல் மூலம், எவ்வித அரசியல் அனுகூலங்களையும் தமிழர்கள் அனுபவிக்கவில்லை. “நல்லிணக்கம்” எனக் கூறி, அரசாங்கம் ஒரு புறம் ஏமாற்ற, “வெண்ணை திரளுது, சட்டியை உடைக்காதீர்கள்” என மறுபுறம் கூட்டமைப்பு ஏமா(ற)ற்ற, தமிழர்களின் ஏதிலி வாழ்வும் அடிமை வாழ்வும் இன்றும் தொடர்கிறது.

நிலைமைகள் இவ்விதம் நிற்க, அடுத்து வரவுள்ள மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகத் தனது பெயர் முன்மொழியப்பட்டால், போட்டியிடத் தயாராக உள்ளதாக, மாவை சேனாதிராஜா அறிவித்துள்ளார். கடந்தமுறை விட்ட தவறை இம்முறை விடக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

மாவை கூறும், “கடந்த முறை விட்ட தவறு” என்பது தவறான நபர் வடக்கு முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதாகவா கொள்ளப்படவேண்டும்? எவர் முதலமைச்சராக வந்தாலும், அவ்வப்போது சிலபல தடைகளைக் கொழும்பு நிச்சயமாகப் போடும். கொழும்பு அரசானது மாகாணத்தில் (வடக்கு, கிழக்கு) மீதான தனது பிடியைத் தளர விட விரும்பாது. ஆளுநர்- முதலமைச்சர் முரண்பாடு, நித்தியப்படியாக தோன்றுவது தோன்றிக்கொண்டே இருக்கும். இதனால், முதலமைச்சர் பதவியினூடாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆற்றக் கூடிய பணிகள் பாதிக்கப்படலாம்.

தற்போதைய வடக்கு முதலமைச்சர், கொழும்பின் தடைகளுக்கு மத்தியில் மட்டும், மக்களுக்கு பணியாற்றவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

தமிழரசுக் கட்சி, தமிழ் மக்களின் தாய்க்கட்சி ஆகும். தமிழரசுக் கட்சியின் சரிவில், எந்தத் தமிழனும் உயர்வு காணவில்லை; காணவும் முடியாது.

ஆனால், தமிழரசுக் கட்சி, தமிழ் மக்களின் எண்ணங்களையும் விருப்பங்களையும் பிரதிபலிக்கத் தவறி விட்டது. கட்சியின் தலைமை, ஒரு சில புல்லுருவிகளின் கைக்குள் சிக்கி விட்டதோ எனத் தமிழ் மக்கள் கவலை கொள்கின்றனர்; அச்சம் தெரிவிக்கின்றனர்.

ஆகவே, தடம் பிழைக்காமல், தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும், அவர்களை நிம்மதியாகக் காலம்காலமாக வாழவைக்கும் வகையில், சாரத்தியம் செய்ய வேண்டிய தலையாய கடப்பாடு, கட்சியின் தலைமை என்ற வகையில் மாவைக்கு நியைவே உண்டு. அவ்வாறு செய்தால் மட்டுமே, மக்களும் வடம் பிடிக்க முன் வருவார்கள்.

மாவை சேனாதிராஜா, விடுதலைப் போராட்டத்தின் பல தசாப்தகாலப் போராளி. அத்துடன் தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற முறையில் அவருக்குப் பொறுப்பும் கடமையும் நிறையவே உண்டு.

மேலும், அதற்கான திறமையும் பொறுமையும் கூட உண்டு. ஆகவே, இதன் ஊடாக, ஏனைய கட்சிகளையும் ஒன்றிணைத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வலுவாக்க முயலவேண்டும்.

இதற்கிடையில், கிழக்கில் தமிழ் மக்களது இருப்பு பெரும் சவால்களை எதிர்நோக்கியபடி உள்ளது. அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒரு குடையின் கீழ் ஒன்றுபட்டு, அணி திரளத்தவறின் நிலைமை ஒட்டுமொத்தத் தமிழர்களின் தற்கொலைக்கு ஒப்பாக மாறிவிடும் ஆபத்துள்ளது.

இதன் தாக்கம் குறித்தும், அதனை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பாகவும் தமிழ் மக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். கிழக்குத் தமிழர் ஒன்றியம் அதற்கான பூர்வாங்க வேலைகளையும் ஆரம்பித்துள்ளது. அந்த ஆக்கபூர்வமான முன்னகர்வை அர்த்தமுள்ளதாக ஆக்குவதற்கு தமிழரசுக் கட்சியின் உழைப்பும் ஊக்கமும் தேவையானதாகும். அதற்கு கட்சியின் தலைவர் என்ற வகையில் மாவையின் அர்ப்பணிப்பு, ஆதரவு அவசியமானதாகும். அத்துடன் இது விடயத்தில் உடனடியாக கிழக்கில் களமிறங்குவது கட்டாயமானதாகும்.

பொது அமைப்புகள் சமய அமைப்புகள் இளைஞர் அமைப்புகள் தமிழ்க்கட்சிகள் எனப் பலவற்றுடனும் தொடர் சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடாத்துவதன் ஊடாக, இனம் சார்ந்து சிந்தித்து, பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டிய கட்டாயநிலை உள்ளது. அதற்காக, இரவு பகலாக உழைக்க வேண்டிய தேவைப்பாடு உள்ளது.

ஆகவே, பெரும் சுமையைத் தோளில் தாங்கிய நிலையில், மாவை முதலமைச்சராக ஒரு மாகாணத்துக்குள் முடங்க விருப்புகிறாரா அல்லது தலைவனாக, இரு மாகாணங்களிலும் சேவைசெய்ய விரும்புகிறாரா?
நிற்க, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில், மாவைக்கு எதிரான கண்டனக் குரல்கள் குறித்து, தொடர்புடைய சங்கங்கள் மன்னிப்புக் கோரியுள்ளன.

தென்னிலங்கை மீனவர்களை வெளியேறக் கோரிய போராட்டம் என்பது, பொது எதிரிக்கு எதிரான மாபெரும் மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டம் ஆகும். இந்தப் போராட்டத்தின் நடுவே, தமிழ் மக்களும் அவர்களது அரசியல் பிரதிநிதிகளும் உரசிக் கொள்வது அழகானதும் அல்ல; ஆரோக்கியமானதும் அல்ல; முதிர்ச்சியானதும் அல்ல.

ஏனெனில், தமிழ் மக்களின் போராட்டத்தின் முக்கிய தாற்பரியத்தை விட, போராட்டத்தில் முட்டிக் கொண்டதுதான் முக்கிய செய்தி ஆக்கப்பட்டுவிடும். இது எதிரிக்கு இனிப்பாக அமைந்து விடும்.
எந்த விடயத்திலும் பிரச்சினைகள் வரலாம்; வரும். ஆகவே, அன்று மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினைகள், மூடிய அறைக்குள் வெளியாருக்குத் தெரியாமல், கௌரவமான கலந்துரையாடல்கள் மூலம் தீர்க்கப்பட்டன.

பிரதி சபாநாயகர் தெரிவில், கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில், அதற்கு முன்னதானக் கலந்துரையாடல் நடைபெறாமையால் எதிர்க்கட்சித் தலைவருக்கு சபையில் அவமானம் ஏற்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில், அதற்கு முன்னதான ஆயத்தக் கலந்துரையாடல் இன்மையால் அகவணக்கம் இல்லாத நினைவு நிகழ்வு நடைபெற்றது. பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட சிறிய வகுப்பறைத் கட்டடத் திறப்பு விழா என்றால் கூட, முன்னாயத்தக் கூட்டத்தைப் பொறுப்புள்ளவர்கள் கூட்டுவார்கள்.

ஆனால், தமிழ் மக்களது வாழ்வில், இருள் நீங்கி ஒளி ஏற்பட செயற்படும் பொறுப்புள்ளவர்கள், பொறுப்பற்று வேற்றுமையில் மூழ்கியுள்ளனர். ஆதலால் தமிழ் மக்கள் துன்பத்தில் மூழ்கியுள்ளனர்.

ஆகவே, ‘நீயா நானா’ என்று வேறுபாடில்லாமல், ‘நாங்கள்’ எனக் கருதி, ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் மூலம், ஆரோக்கியமான தமிழ்ச் சமூகம் உருவாக்கப்பட வேண்டும்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv