சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தமிழர் தாயகத்தில் கவனயீர்ப்புப் போராட்டங்கள்!
சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் நேற்றுக் கவனயீர்ப்புப் போராட்டங்களும் பேரணிகளும் நடைபெற்றன. அதன் இறுதியில் ஐ.நாவுக்கு அனுப்பி வைக்கவென மனுக்களும் கையளிக்கப்பட்டன.
வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு இந்தப் போராட்டங்களை ஏற்பாடு செய்திருந்தது.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இராணுவத்திடம் காணிகைளைப் பறிகொடுத்த மக்கள் காணி விடுவிப்புக்குப் போராடும் மக்கள் உள்ளிட்ட பலரும் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் முன்பாக நேற்று முற்பகல் ஒன்றுகூடினர். அங்கிருந்து பேரணியாக கோவில் வீதியில் உள்ள ஐ.நா. கிளை அலுவலகத்துக்குச் சென்று மனுவைக் கையளித்தனர்.
கிளிநொச்சி
கிளிநொச்சியில் நேற்று முற்பகல் 10 மணிக்குக் கிளிநொச்சி டிப்போச் சந்திக்கு அருகில் அருகில் பொதுமக்கள் ஒன்றுகூடி கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். அத்தோடு கிளிநொச்சி 155 ஆம் கட்டைப் பகுதியில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகத்துக்குச் சென்று அங்கு தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கையளித்தனர்.
இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த மக்கள் அரசியல் கைதிகளை விடுதலை செய், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குப் பதில் சொல், பயங்கரவாதச் தடைச் சட்டத்தை உடனே நீக்கு, இலங்கையில் நிலைமாறு கால நீதிக்கான அமைச்சு ஒன்றை உருவாக்கு போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளைத் தாங்கியிருந்தனர்.
முல்லைத்தீவு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இராணுவத்திடம் காணிகைளைப் பறிகொடுத்த மக்கள், போரால் பாதிக்கப்பட்ட மக்கள் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்துக்கு அருகில் நேற்று முற்பகல் 9 மணியளில் ஒன்று கூடினர். அங்கிருந்து மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் தகரக் கொட்டகைகள் அமைத்து தொடர் அமைதி வழிப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் இடத்துக்குப் பேரணியாகச் சென்றனர். அங்கு ஐ.நாவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ள மனு வாசிக்ககப்பட்டது. அதன் பின்னர் பேரணியாகச் சென்றவர்களில் 10 பேர் முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சியில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகத்துக்குச் சென்று தங்கள் மனுவைக் கையளித்தனர்.
வவுனியா
வவுனியா மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஒன்றிணைந்த பாதிக்கப்பட்ட பெண்கள் ஒருங்கினைந்த குழுவினரால் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று முற்பகல் 10 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது.
இலங்கையில் நிலைமாறு கால நீதி முன்னெடுப்புக்களில் இணைப்பங்காளியாவதற்கு இலங்கையுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்துகொள், பன்னாட்டு நீதிபதிகளைக் கொண்ட நீதிப் பொறிமுறையே எமது கோரிக்கை என்ற வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை மேற்கொண்டனர். ஒரு மணி நேரமான தமது போராட்டத்தை மேற்கொண்ட பின்னர் அவ்விடத்திலிருந்து கலைந்து சென்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மேற்கொள்ளும் போராட்ட இடத்திற்குச் சென்று தமது ஆதரவையும் வழங்கியுள்ளனர்.
மன்னார்
மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக முற்பகல் 10.30 மணியளவில் ஒன்று கூடிய மக்கள் காணாமல்போன தமது உறவினர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறும், சிலர் காணிகளையும், மக்களின் நிலங்களையும் , சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும் விடுவிக்கக் கோரியும் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் அமைதியான முறையில் கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். அதில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், நில ஆக்கிரமிப்பால் பாதிப்புக்கு உள்ளானவர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீனவர்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
கிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் மன்னார் மறைமாவட்டக் குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசையிடம் மனு கையளிக்கப்பட்டது.
கையளிக்கப்பட்ட மனுவை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது அமர்வு தற்போது இடம்பெற்று வருகின்ற நிலையில் உரிய தரப்பினரிடம் கையளிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர், “ஆயர் சார்பாக நான் உங்களின் கோரிக்கை அடங்கிய மனுவைப் பெற்றுக்கொண்டுள்ளேன். தற்போது இடம்பெற்று வருகின்ற ஐ.நா.மனித உரிமைகள் கூட்டத்தொடரில் சம்மந்தப்பட்டவர்களுக்குக் குறித்த மனுவை உடனடியாக அனுப்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றோம். உங்களுடைய நீதியான போராட்டம் இது. இங்குள்ளவர்களைக் காண்கின்றபோது மிகவும் வேதனையை ஏற்படுத்துகின்றது. எங்களுடைய உறவுகள், கடத்தப்பட்டு, காணமால் ஆக்கப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டும் உள்ளனர். எனவே பல்வேறு வகையில் பாதிக்கப்பட்ட எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்” – என்றார்.
கிழக்கு மாகாணம்
கிழக்கு மாகாணத்திலும் இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
காணாமல்பேனவர்களின் உறவினர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் நடைபெற்றது.
திருகோணமலை சிவன் கோயிலடி மற்றும் அம்பாறை திருக்கோயில் பிரதேசங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கபட்டன.
சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட நீதிப்பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பணிக்குழுவின் அறிக்கையை உடனடியாக அமுல்படுத்த வேண்டும், நிலைமாறு கால நீதிக்கான அமைச்சு உருவாக்கப்பட வேண்டும் என்பன வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை அவர்கள் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Global Tamil News,Daily Tamil News, Sri Lankan News,india breaking news,Tamil online news,Tamil website,Tamil Daily News Website,Sri Lanka News Online,sri lanka news, tamil news, tamil web site,tamil news site,latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news,top news, lifestyle news, daily news update,தமிழ் செய்தி,இலங்கை செய்தி,சிறிலங்கா,இலங்கை செய்திகள்,இலங்கை தமிழ் செய்திகள்,இலங்கை செய்தி,தமிழ் செய்திகள்,tamil news today,tamil news cinema,tamil news daily,tamil news for today,tamil news jaffna,Tamil News Paper,tamil news paper,tamil news paper,Jaffna news,jaffna news today