நிலைப்பாட்டைத் தெளிவாக உணராதவர்களே கூட்டமைப்பு மீது குற்றம்சுமத்துகின்றனர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கால நீடிப்புக்கு உடன்பட்டுள்ளது என்ற விடயத்தில் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,
மக்களுக்காக செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உண்மையான நிலைப்பாட்டைத் தெளிவாக உணராதவர்களே கூட்டமைப்பு மீது குற்றம்சுமத்துகின்றனர் என்று சாடியுள்ளார்.
மட்டக்களப்பு – களுமுந்தன்வெளி வலம்புரி வாசகர் வட்டமும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கமும் இணைந்து நடாத்திய மகளிர்தின விழா நேற்றையதினம் களுமுந்தன்வெளி பொது நூலக முன்றலில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த சனிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களை உள்ளடக்கிய கூட்டத்தின் பிரகாரம் மேற்படி மேற்குலக நாடுகளுக்கு 3 கோரிக்கைகளைச் சமர்ப்பித்திருப்பதாக சுட்டிக்காட்டிய அவர்,
2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானம் இக்காலகட்டத்திற்குள் முற்றுமுழுதாக நிறைவேற்றப்பட வேண்டும், அவற்றை எந்த விதத்தில் நிறைவேற்றுகின்றார்கள் என்பதைக் கண்காணிப்பதற்கு மனித உரிமை அலுவலகம் ஒன்றை ஸ்ரீலங்காவில் நிறுவி கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும், ஸ்ரீலங்கா அரசாங்கம் இப்பிரேரணையை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் ஐக்கிய நாடுகள் சபையும், இந்த மேற்குலக நாடுகளும் பொறுப்புக் கூறி பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு புதிய பொறிமுறையின் மூலம் நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்காவில் இரண்டாம் தரப் பிரஜைகளாக அன்றி, வாழ்வதற்காக வேண்டி அகிம்சை ரீதியாகவும், ஆயுதரீதியாகவும் போராடி தோற்கடிக்கப்பட்ட ஒரு இனமாக தற்போது வாழ்ந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
அத்துடன் தமிழ் மக்களது பகுதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தும் பல போராட்டங்களை நடாத்திய பின்னரும் தோற்கடிக்கப்பட்ட இனமாக வாழ்ந்து கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள மாகாண சபை உறுப்பினர்,
கடந்த காலத்தில் உரிமைகளுக்காக போராடிய தமிழ் மக்கள் தற்போது தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக இராஜதந்திர ரீதியில் வெளிநாடுகளின் அழுத்தங்களை ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மீது பிரயோகித்து, இழந்தவற்றைப் பெறுவதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றோம் என்று கூறினார்.
தற்போது ஜெனிவாவில் மனித உரிமை ஆணைக்குழுவின் அமர்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், ஸ்ரீலங்காவில் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி போர் மௌனிக்கப்பட்டது முதல் இன்றுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே தமிழ் மக்களின் உரசியல் உரிமைக்காக போராடுவதாக சூளுரைத்துள்ளார்.