ஜே.என்.யு. மாணவர் முத்துக்கிருஷ்ணன் எந்தவொரு அரசியல் அமைப்பிலும் உறுப்பினராக இல்லை – டெல்லி போலீஸ்
டெல்லியில் உயிரிழந்த ஜே.என்.யு. மாணவர் முத்துக்கிருஷ்ணன் எந்தவொரு அரசியல் அமைப்பிலும் உறுப்பினராக இல்லை என, டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
சேலம் சாமிநாதபுரம் மருதநாயகம் தெருவை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவரது மனைவி அலமேலு. இவர்களது மகன் முத்துக்கிருஷ்ணன் (வயது 30). இவர் டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பில் நவீன வரலாறு படித்தார். நேற்று ஹோலி பண்டிகை விடுமுறை என்பதால் டெல்லி முனீர்காவில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு சென்ற இவர் அங்கு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து டெல்லி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் முத்து கிருஷ்ணன் அரசியல் சார்ந்த எந்தவொரு அமைப்பிலும் உறுப்பினராக இல்லை என, போலீஸ் கமிஷனர் ஈஸ்வர் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் “ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் எந்தவொரு மாணவர் அமைப்பிலும் முத்துக்கிருஷ்ணன் உறுப்பினராக இல்லை. அதேபோல கல்லூரி நிர்வாகத்திலிருந்தும் முத்துக்கிருஷ்ணன் மீது எந்தவொரு புகாரும் இல்லை. தற்கொலை செய்வதற்கு முன் முத்துக்கிருஷ்ணன் தற்கொலைக் கடிதம் எதையும் எழுதிவைக்கவில்லை” என்றார்.




