நிலைமாறுகால நீதி செயன்முறைகளில் பெண்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்த வேண்டும்: சம்பந்தன்
நிலைமாறுகால நீதி செயன்முறைகளில் பெண்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதோடு, இச் செயன்முறைகளின் பெண்களின் முழுமையான பங்களிப்பை உறுதிசெய்யுமாறு அரசாங்கத்திடம் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்படும் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள செய்தியிலேயே இக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
கடந்த கால ஆயுதப் போராட்டத்தில் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டவர்கள் பெண்களே என சுட்டிக்காட்டியுள்ள சம்பந்தன், காணாமல் போன தமது உறவுகளை இன்னும் தேடிக் கொண்டே இருக்கும் அவல நிலையில் உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இன்றும் பெண்களை வலுவற்றவர்களாகவும், துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதும் என பல்வேறு பிரச்சினைகள் தொடர்கின்றமையானது, அவர்கள் தங்கள் வாழ்க்கையை முன்னெடுத்து செல்வதற்கு பாதிப்பாக அமைந்துள்ளதென்றும் இதற்கு அவசர தீர்வுகள் அவசியம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் வாழும் சகல பெண்களின் சுய கௌரவத்தையும் பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள சம்பந்தன், புதிய அரசியலமைப்பானது இந்த அபிலாஷைகளை உள்ளடக்குவதோடு, சமுதாயத்தின் எல்லா கோணங்களிலும் பெண்களுக்கு அதிகளவு பாதுகாப்பையும் வலுவூட்டலையும் உறுதி செய்யவும் வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.