கண்டி மாவட்டத்தில் திகன, அகுரன, ஹலகா, கடுகஸ்தொட, மெனிக்கின்ன, அபதென்ன, பூஜாபிடிய போன்ற இடங்களில் அண்மைக்காலங்களில் ஏற்பட்ட சம்பவங்கள் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டள்ளது.
இந்த நிலையில் கலவரம் நடைபெற்ற இடத்திற்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக நேற்று நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இந்த விஜயத்தில் கண்டி பள்ளிவாசலின் மௌலவி மற்றும் அப்பிரதேச முஸ்லிம் மக்களை சந்தித்து உரையாடினார்.
சம்பவம் இடம்பெற்ற பிரதேசங்களில் உள்ள பொது மக்களுக்கோ அல்லது அவர்களது உடைமைகளுக்கோ சேதம் ஏற்படாதவாறு இலங்கை இராணுவத்தினர் கடமைகளை மேற்கொள்ளுவார்கள் என்று இராணுவ தளபதி அப்பிரதேச மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய சேதமாக்கப்பட்ட கட்டடங்கள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்குள் மீள நிர்மாணித்து தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கலவரம் நிமித்தம் பாதிக்கப்பட்டு பாடசாலைகளில் தங்கியிருக்கும் பொது மக்களையும் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுடன் உரையாடியமை குறிப்பிடத்தக்கது.