கூட்டு அரசை நிறுவும் நோக்குடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்து ணர்வு ஒப்பந்தம் நீடிக்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் ஆளும் கட்சியிடம் கேள்வி எழுப்பியமையினால் நேற்றுச் சபையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை, மகிந்த அணி நாடாளுமன்றக் குழுத் தலைவர் தினேஷ் குணவர்தன கேள்வி எழுப்பியதை அடுத்தே சபையில் சர்ச்சையான நிலமை ஏற்பட்டது.
‘நாட்டின் அரசமைப்புத் தொடர்பான முக்கியமான விடய மொன்றை சபைக்கு முன்வைக்க விரும்புகின்றேன். 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டு அரசை நிறுவப் போவதாக தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க யோசனையொன்றை முன்வைத்தார்.
இதன்போது அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் எண்ணிக்கையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கூட்டு அரசில் அங்கம் வகிக்க முடியுமான அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பதனை அரசு ஏற்றுக்கொள்ளுமா? தற்போது இந்த விதிமுறை மீறப்பட்டுள்ளது என்பதனை ஏற்பீர்களா?
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி நிறைவு பெற்றுள்ளமை அரசு ஏற்குமா? சிரானி விஜேவிக்கிரம மற்றும் பியசேன கமகே ஆகியோருக்கு இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளமையினால் அரசமைப்பின் 46 ஆவது சரத்து மீறப்பட்டுள்ளது. இதனை ஏற்பீர்களா’ என்று தினேஷ் குணவர்தன கேள்வி எழுப்பினார்.
‘சிரானி விஜேவிக்கிரம இராஜாங்க அமைச்சினை பெற்றுக்கொண்டமையா உங்களது பிரச்சினை. சிரானி விஜேவிக்கிரம மீண்டும் உங்களுக்கு தேவையா?’ என்று சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல கிண்டலாகக் கேட்டார்.
‘சிரானி எனக்குத் தேவையில்லை. ஐக்கிய தேசியக் கட்சி சிரானியை வைத்துக் கொள்ளட்டும். தற்போது கூட்டு அரசின் இரு பிரதான கட்சிகளின் ஒப்பந்தம் நிறைவுபெற்றுள் ளது.
அரசமைப்புக்கு முரணாக அமைச்சரவை இயங்கி வருகின்றது. ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தில் பதில் வழங்க வேண்டும்’ என்று தினேஷ்குணவர்தன குறிப்பிட்டார்.
இதனையடுத்து பேசிய அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, ரணில் விக்கிரமசிங்க விரைவில் பதில் வழங்குவார். எனினும் கூட்டு அரசு தொடர் பாக எதிரணி கவலை கொள்ளத் தேவையில்லை. இது ஆளும் கட்சி பிரச்சினை என்று குறிப்பிட்டார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுர குமார திசாநாயக்க, கூட்டு அரசு இரண்டு ஆண்டுகளுக்கே என்று கூறப்பட் டது. பிரதான கட்சிகளுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் செப்ரெம்பர் மாதமே நிறைவு பெற்று விட்டது. புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதா? என்றுகேட்டபோது, இடையில் குறுக்கிட்டு பேசிய அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, இது கூட்டு அரசின் பிரச்சினையாகும். எதிரணி தலையிட வேண்டியதில்லை, என்றார்.
‘இது கூட்டு அரசின் பிரச்சினை மாத்திரமல்ல. நாட்டு மக்களின் பிரச்சினையாகும். இரு பிரதான கட்சிகளுக்கிடையிலான ஒப்பந்தம் நீடிக்கப்படுமா? இல்லையா? புதிய ஒப்பந்தங்கள் ஏதும் கைச்சாத்திட்டிருந்தால் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படியாயின் சபாநாயகரே உங்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏதும் கிடைத்துள்ளதா? என்றார் அநுரகுமார.
தனக்குப் புதிய ஒப்பந்த தொடர்பான எந்தவொரு நகலும் அதற்கான தகவல்களும் கிடைக்கவில்லை என்று சபாநாயகர் கரு ஜயசூரிய கூறினார்.
இதன்போது உதய கம்மன்பில, கூட்டு அரசின் ஒப்பந்தம் நிறைவு பெற்றுள்ள நிலையில் அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் சொகுசு வாழ்க்கைக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியுமா? என்றார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய குறுக்கிட்டு இந்தக் கேள்விக்கான பதிலை ரணில் வழங்குவார் என்று கூறி வாக்குவாதத்தை நிறைவுக்கு கொண்டு வந்தார்.