பாலியல் தவறு செய்யும் ஆசிரியர்களுக்கு ஆண்மை நீக்க செய்ய வேண்டும் என்று சபையில் நேற்றுக் கொந்தளித்தார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்.
விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இத்தகைய ஆசிரியர்களுக்கு உடனடியாகவே சாவுத் தண்டனை வழங்கப்பட்டுவிடும் என்று சக உறுப்பினர் புவனேஸ்வரனும் அதனை ஆமோதித்தார்.
வடக்கு மாகாண சபையின் வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதம் நேற்று இடம்பெற்றபோது, மாணவ, மாணவிகளைக் குறிப்பிட்ட சில ஆசிரியர்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்துவது குறித்துப் பேசப்பட்டது. அதன்போதே இந்தக் கருத்துக்கள் முன்வைக்கப் பட்டன.
உறுப்பினர் புவனேஸ்வரன் இது தொடர்பில் கருத்துரைக்கையில் தெரிவித்ததாவது:
ஆசிரியர்களால் மேற்கொள்ளப்படும் பாலியல் தவறுகள் குற்றங்களுக்கு அதியுச்ச தண்டனை வழங்க மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும். வடக்கு மாகாணத்தில் பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மீது 11 தடவைகள் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டபோதும் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறான நிலையிலேயே எமது கல்விச் சூழல் இருக்கின்றது. மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு இந்த விடயத்தில் உறுதிப்படுத்தப்படவேண்டும். ஒரு ஆசிரியர் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானால் அவர் மீது தற்போது எடுக்கப்படும் நடவடிக்கை இடமாற்றம் மட்டுமே. ஆனால் இதன் ஊடாக மட்டும் இந்தக் குற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாது. அவர்கள் மீது சுயாதீன விசாரணை நடத்தப்படவேண்டும். குற்றம் நிருபிக்கப்பட்டால் அவரைப் பதவியிலிருந்து நீக்கவேண்டும். அத்துடன் நீதிமன்ற நடவடிக்கைக்கும் அவரை உட்படுத்த வேண்டும் – என்றார்.