காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, 1998-ம் ஆண்டு முதல் 19 ஆண்டுகளாக அப்பதவியை வகித்து வருகிறார். அவருக்கு உடல்நிலை சரி இல்லாததால், காங்கிரஸ் துணைத்தலைவரும், சோனியாவின் மகனுமான ராகுல் காந்திக்கு பதவி உயர்வு அளிக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீர்மானித்தனர்.
அதன்படி, காங்கிரஸ் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடந்த 4-ந் தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம், ராகுல் காந்தி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரை முன்மொழிந்து அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் மனு தாக்கல் செய்தனர்.
ஒரே வேட்பாளர்
இந்நிலையில், நேற்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. ராகுல் காந்திக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட 89 மனுக்களும் தகுதியானவையாக இருந்ததால், அனைத்து மனுக்களும் ஏற்கப்பட்டன. இத்தகவலை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரிவு தலைவர் முள்ளபள்ளி ராமச்சந்திரன் தெரிவித்தார்.
ராகுல் காந்தியை தவிர, வேறு யாருக்கு ஆதரவாகவும் மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. ராகுல் காந்தி மட்டுமே ஒரே வேட்பாளராக இருக்கிறார்.
11-ந் தேதி அறிவிப்பு
எனவே, காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி விட்டது.
இருப்பினும், மனுக்களை வாபஸ் பெற 11-ந் தேதி கடைசி நாள் ஆகும். எனவே, அன்றுதான், காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.