இராணுவத்தால் அண்மையில் விடுவிக்கப் பட்ட பகுதியான வலி. வடக்கு வயாவிளான் பகுதிக்குச் செல்லும் மக்கள் வெடிபொருள்களில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு அங்கு ஆங்காங்கே எச்சரிக்கைப் பதாகைகள் தொங்க விடப்பட்டுள்ளன.
இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் 27 வருடங்களாக இருந்த வயாவிளான் பகுதி கடந்த சில தினங்களுக்கு முன்னர் மக்களிடம் மீண்டும் கையளிக்கப்பட்டது. அங்கு ‘மிதிவெடி, வெடிபொருள்களில் இருந்து எமது மக்களைப் பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில் எச்சரிக்கைப் பதாகைகள் பல தொங்க விடப்பட்டுள்ளன.
அத்துடன் குறித்த பகுதிகளில் வெடிபொருள்களை கண்டால் கீழ்க் கண்ட தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சொன்ட் நிறுவனத்துக்கு 021-2226700 என்ற இலக்கத்துக்கும், கலோ ட்ரஸ்ட் நிறுவனத்துக்கு 021-2223779 என்ற இலக்கத்துக்கும், பிராந்திய மிதிவெடி செயற்பாட்டு அலுவலக 021-2285415 என்ற இலக்கத்துக்கும் தொடர்புகளை ஏற்படுத்தலாம்.
இராணுவத்தினர் வசம் இருந்து விடுவிக்கப்படும் இடங்களில் இருந்து கடந்த காலங்களில் இருந்து இன்றுவரை பெருமளவான வெடி பொருள்கள் மீட்கப்பட்டுவரும் நிலையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் இவ்வாறான பதாகைகள் தொங்க விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.