கூட்டு எதிரணி வலுவான நிலையில் இருப்பதால் பொறுப்புக்கூறல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசு தாமதித்து வருகின்றது என்று தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் கலாநிதி ஜெகான் பெரேரா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
தற்போதைய அரசு நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாட்டை வாக்குறுதியளித்தபடி முன்னெடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த செயற்பாடுகள் தாமதம் அடைந்தாலும் முன்னெடுக்கப்படும் என்ற நம்பிக்கை வலுவாகவே உள்ளது.
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடு தொடர்பாக, புரிந்து கொண்டுள்ள அரசின் தலைமையே தற்போது பதவியில் உள்ளது. கூட்டு எதிரணி மிகவும் பலமான முறையில் செயற்படுவதன் காரணமாக அரசால் இந்த செயற்பாடுகளை சரியான முறையில் முன்னெடுக்க முடியாத நிலைமை உள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகத்துக்கான ஆணையாளர்களை நியமிக்கும் சாத்தியம் இருந்தும் அதனை அரசு தாமதிக்கின்றது.
உண்மையை கண்டறியும் ஆணைக்குழு மற்றும் நட்டஈடு வழங்கும் பணியகம் என்பனவற்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றைச் சட்டமாக்குவதற்கு அரசு தயங்குகின்றது.
தற்போது உள்ளூராட்சிமன்றத் தேர்தலும் நடைபெறவிருப்பதால் நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் அரசு மேலும் தாமதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று மேலும் தெரிவித்துள்ளார்.