முச்சக்கரவண்டியில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட 16 வயதுச் சிறுமி ஒருவர் தவறான முடிவெடுத்துத் தற்கொலைக்கு முயன்ற நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்
பட்டார்.
இது தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டு பொலிஸாரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தக் கூட்டு வன்புணர்வு வவுனியா மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. வன்புணர்வின் பின்னர் சிறுமியை குகன் நகரில் உள்ள ஆள்களற்ற வீடு ஒன்றில் குற்றவாளிகள் அநாதரவாக விட்டுச் சென்றனர்.
ஒருவாறு நேற்று வீடு வந்து சேர்ந்த சிறுமி உறவினர்களிடம் தெரிவித்தை அடுத்து அவர்கள் பொலிஸாரிடம் முறையிட்டனர்.
சிறுமியின் தகவல்படி முதலில் இருவரைக் கைது செய்த பொலிஸார் அவர்களிடம் விசாரணை செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி மேலும் இருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அந்த இருவரும் கொடுத்த தகவலின்படி மேலும் ஒருவர் தேடப்பட்டு வருகின்றார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வைத்தியசாலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவி தனது விட்டுக்கு அருகில் உள்ள முதன்மைச் சாலையில் பஸ்ஸைவிட்டு இறங்கி வீட்டை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த சமயம் முச்சக்கரவண்டியில் வந்தவர்களால் கடத்தப்பட்டார் என்று பொலிஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
மதிய நேரம் மாணவி தனித்துச் சென்றதைப் பயன்படுத்தி அவரைக் கடத்தியுள்ளனர் என்று கூறப்பட்டது.
சம்பவம் தொடர்பில் அறிந்த உறவினர்கள் நேற்று வவுனியா பொலிஸில் முறையிட்டனர். அவர்கள் பொலிஸில் முறையிடச் சென்றிருந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க முயன்றிருக்கிறார்.
இதை அடுத்து உறவினர்களால் அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் தற்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டியிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது.
பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.