யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு வடமாகாணத்தின் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவசர பணிப்புரையை பிறப்பித்துள்ளார்.
யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், அரச சட்டவாதி நாகரட்னம் நிஷாந் மற்றும் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் குழுவினருக்கு இடையில் இன்றைய தினம் இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே மேற்படி பணிப்புரையானது நீதிபதியால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
யாழ்.மேல் நீதிமன்றில் நேற்று 1062/16 என்ற கைக்குண்டு வாள்வெட்டு தொடர்பான வழக்கின் பிணை விண்ணப்பமானது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
இப் பிணை விண்ணப்பத்தின் மீதான விசாரணையில் அரச சட்டவாதி கருத்து தெரிவிக்கையில்,
தற்போது யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு குழுமோதல் போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதுடன் இதனால் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்தும், அம் மக்கள் அச்சத்திலும் பொழுதை கழித்து வருகின்றார்கள்.
இவ்வாறான நிலையில் இக் கைக்குண்டு வைத்திருந்த மற்றும் வாள்வெட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபருக்கு பிணை வழங்குவது சமூகத்தின் பாதுகாப்பை மேலும் கேள்விக்குள்ளாகி விடும் என குறிப்பிட்டு அப் பிணை மனுவுக்கு ஆட்சேபனை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி அப்பிணை மனுவை நிராகரித்து வழக்கை ஒத்திவைத்ததுடன், நீதிபதியின் உத்தரவுக்கமைய இன்று விசேட கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இதன்படி இன்று நடைபெற்ற கூட்டத்தில் யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.