இலங்கையின் புதிய அரசமைப்பு முயற்சிகள் தொடர்பாக அறிந்துகொள்வதில் அமெரிக்க அதிகாரிகள் ஆர்வம் கொண்டிருந்தனர் எனத் தெரியவருகின்றது. இந்த முயற்சியின் ஊடாக தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்குமா என்பதைத் தெரிந்துகொள்வதே அவர்களின் நோக்கமாக இருந்துள்ளது.
அமெரிக்காவுக்கு கடந்த மாத இறுதியில் சபாநாயகர் கரு ஜயசூரியா தலைமையில் குழுவொன்று விஜயம் செய்தது. இதில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சந்திரானி பண்டார, இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், குமார வெல்க, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட 15 இற்கும் மேற்பட்ட தரப்புக்களுடன் இவர்கள் சந்திப்புக்களை நடத்தினர்.
இந்தச் சந்திப்புக்கள் ஒவ்வொன்றிலும் இலங்கையின் நல்லிணக்க முயற்சி, சுயாதீன ஆணைக்குழுக்களின் உருவாக்கம், தகவலுக்கான உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை உள்ளிட்ட விடயங்களை சபாநாயகர் கரு ஜயசூரியா அமெரிக்க அதிகாரிகளுக்கு எடுத்துரைத்துள்ளார்.
சந்திப்பின் இறுதியில் அமெரிக்க அதிகாரிகள், புதிய அரசமைப்புத் தொடர்பில் இலங்கைக் குழுவினரிடம் கேள்விகளை எழுப்பியுள்ளனர். புதிய அரசமைப்பு ஊடாகத் தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கப் பெறுமா என்பதே அவர்களின் பிரதான கேள்வியாக இருந்துள்ளது.
இந்தக் கேள்விகளுக்கு புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் வழிநடத்தல் குழுவிலிருந்த நிமல் சிறிபால டி சில்வாவே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பதில் வழங்கியுள்ளார்.
கேட்கப்பட்ட மேலதிக கேள்விகளுக்கே, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பதிலளித்துள்ளார்.