Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஒற்றையாட்சி முறைமை பலப்படுத்தப்பட்டுள்ளது! – சமஷ்டிக்கு இடமில்லை

ஒற்றையாட்சி முறைமை பலப்படுத்தப்பட்டுள்ளது! – சமஷ்டிக்கு இடமில்லை

“புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையின் சிபாரிசுகளின் பிரகாரம் இலங்கை பிளவுபடாததும் பிரிக்கமுடியாததுமான நாடாக காணப்படுகின்றது. அத்துடன், ஒற்றையாட்சி கட்டமைப்பும் முன்பிருந்ததைவிட பலப்படுத்தப்பட்டுள்ளது” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அரசமைப்புப் பேரவையின் வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்தார்.

அத்துடன், அதிகாரப்பகிர்வு குறித்து நாட்டில் தவறான முன்னுதாரணங்கள் கட்டவிழ்த்துவிடப்படுவதாகவும், சமஷ்டி என்ற அம்சம் (இலட்சனை) இடைக்கால அறிக்கையில் எங்கும் கூறப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை கடந்த 20ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து நாட்டில் இவ்வாறான விளக்கங்கள் மக்கள் மத்தியில் கொடுக்கப்பட்டுவருவதால் அது குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறியதாவது:-

“2015ஆம் ஆண்டு நாட்டு மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின் பிரகாரம் புதிய அரசமைப்பொன்றை உருவாக்க நாடாளுமன்றம் அரசமைப்புப் பேரவையாக 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி மாற்றியமைக்கப்பட்டது. முன்னர் ஆறு உப குழுக்கள் உருவாக்கப்பட்டு அதன் அறிக்கை கடந்த நவம்பர் மாதம் வழிநடத்தல் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த ஆறு உப குழுக்களும் ஆறு விடயங்கள் சம்பந்தமாக ஆழமாக ஆராய்ந்து தமது சிபாரிசுகளை உள்ளடக்கிய அறிக்கையை சமர்ப்பித்திருந்தன.

ஆட்சிமுறை, அதிகாரப்பகிர்வு, நிறைவேற்று அதிகாரம், அரச காணிகளைக் கையாளுதல், நிதி முகாமைத்துவம் என்பன தொடர்பில் அனைத்துக் கட்சிகளின் நிலைப்பாடுகளும் அதில் அடங்கும். இது அரசமைப்புக்கான அடித்தளம் மட்டுமே. இன்னமும் அரசமைப்பின் பணி ஆரம்பிக்கப்படவில்லை.

நாட்டில் புதிய அரசமைப்பு தொடர்பில் கருத்தாடல்கள் இடம்பெறுவதே இடைக்கால அறிக்கையின் பிரதான நோக்கமாக இருந்தது. கலந்துரையாடல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நகர்வுகள் இடம்பெறும். எதிர்வரும் 30ஆம் திகதிமுதல் இடைக்கால அறிக்கை மீது மூன்றுநாள் விவாதம் நடைபெறவுள்ளது.

அதிகாரப்பகிர்வு மற்றும் ஆட்சிமுறை பற்றி இடைக்கால அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இலங்கை ஒற்றையாட்சி நாடாகக் காணப்படுகிறது. புதிய அரசமைப்பில் இலங்கையின் இறையாண்மை பிளவுப்படாததும் பிரிக்கமுடியாததுமாகவே தெளிவாக வலியுறுத்தப்படுகிறது.

நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் தவறான கருத்துகளை முற்றாக நிராகரிக்கின்றோம். சமஷ்டி என்ற அம்சம் (இலட்சினை) பற்றி இடைக்கால அறிக்கையில் எங்கும் குறிப்பிடவில்லை. தற்போதைய அரசமைப்பில் இல்லாத ஒற்றையாட்சியைப் பாதுகாக்கும் முன்மொழிவாக இலங்கை என்பது பிளவுபடாததும் பிரிக்கமுடியாததுமான நாடாக உள்ளது.

ஆனால், மாகாணங்களுக்கான உச்சக்கட்ட அதிகாரம் பகிரப்படும். அரசமைப்பில் திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் மாத்திரமே கொண்டுவரமுடியும். இறையாண்மை பிரிக்கமுடியாததாகக் காணப்படுகிறது. சமஷ்டி அரசமைப்பில் மாத்திரமே இறையாண்மையை பிரிக்கமுடியும்.

மாகாணங்கள் பிரிந்து செல்வதைத் தடுக்க தற்போதைய அரசமைப்பில் கூட தெளிவான சட்ட ஏற்பாடுகள் இல்லை. ஆனால், புதிய அரசமைப்பில் மாகாணங்களைப் பிளவுபடுத்த முடியாதவகையில் ஒற்றையாட்சி பலப்படுத்தப்பட்டுள்ளது.

மாகாணங்களில் கலவரங்கள், போராட்டங்கள், அசாதாரண நிலைகள் தோன்றும்போது ஜனாதிபதியின்கீழ் நேரடியாக மாகாண அதிகாரத்தைக் கொண்டுவரமுடியும் என்பதுடன், மாகாணத்தைக் கலைக்கவும் அதிகாரம் உள்ளது. நாடாளுமன்றத்தில் சட்டமூலமொன்றை நிறைவேற்றியும், நீதிமன்றத்தின் ஆதரவுடனும் மேற்கண்ட நடவடிக்கையை எடுக்கமுடியும்.

எனவே, தற்போதைய அரசமைப்பையும் தாண்டி புதிய அரசமைப்பில் ஒற்றையாட்சிக் கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பௌத்த மதத்துக்கான முன்னுரிமையும் அவ்வாறே பாதுகாக்கப்படும்” – என்றார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …