பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியின் வெற்றியாளராக ஆரவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு சமூகவலைத்தளத்தில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
பிக் பாஸ் போட்டியாளர்களில் சிநேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம் மற்றும் ஹரிஷ் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தேர்வானார்கள். அவர்களில் யார் வெற்றியாளர் என்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மேலும், நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறியவர்கள் அனைவருமே இறுதிப் போட்டியாளர்களைக் காண வீட்டுக்குள் அனுப்பப்பட்டார்கள்.
அதில் ஸ்ரீ மற்றும் நமீதா இருவரும் கலந்து கொள்ளவில்லை. பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற ஓவியா “ஹாய் ஆரவ், எப்படி இருக்க.. நீ ரொம்ப உடல் மெலிந்து விட்டாய்” என்று மட்டுமே பேசினார்.
இறுதிப் போட்டியாளர்கள் நால்வரில் முதல் ஆளாக, கணேஷ் வெங்கட்ராம் வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஹரிஷ் வெளியேற்றப்பட்டார்.
சிநேகன் மற்றும் ஆரவ் இருவரையும் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று கமல் அழைத்துக் கொண்டு மேடைக்கு வந்தார்.இறுதியாக வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டு கோப்பையும், 50 லட்ச ரூபாய் பணமும் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றிக்கு காரணமான தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி என்று பேசினார் ஆரவ்.பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவருடனும் ‘அண்ணாத்தா ஆடுறார்’ பாடலுக்கு நடனமாடினார் கமல்.
அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டின் விளக்குகள் அனைத்தையும் கமல் அணைக்க நிகழ்ச்சி முடிவுற்று. விரைவில் அடுத்த சீசனில் சந்திக்கலாம் என்பதோடு முடித்துவிட்டார்கள்.
சமூகவலைத்தளத்தில் சர்ச்சைபிக் பாஸ் இறுதிப் போட்டி நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போதே, சமூகவலைத்தளத்தில் வெற்றிக் கோப்பையுடன் ஆரவ் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பலரும் இதற்கு தகுதியானவர் அல்ல என்று கருத்து தெரிவித்து வந்தார்கள். மேலும், சிநேகன் மற்றும் கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் மட்டுமே தகுதியானவர்கள் என்று கூறி வருகிறார்கள்.
மேலும், ஆரவ்வின் ட்விட்டர் பக்கத்தில் “இது தான் எனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு” என்று ட்வீட் செய்தார். அதற்கு பதிலடியாக பலரும் அவருடைய ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஓவியாவால் மட்டுமே இது உங்களுக்கு கிடைத்திருக்கிறது என்று பலரும் பதிலளித்து வருவது குறிப்பிடத்தக்கது.