ராஜஸ்தான் மாநிலத்தில் ப்ளூ வேல் ஆன் லைன் விளையாட்டில் ஈடுபட்டு ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவியை போலீஸார் மீ்ட்டனர்.
தற்கொலைக்குத் தூண்டும் ப்ளூ வேல் ஆன் லைன் விளையாட்டில் ஈடுபட்டு மாணவர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மும்பை, கொல்கத்தா, உத்தரபிரதேசம் மட்டுமின்றி தமிழகத்தில் மதுரையிலும் ப்ளூ வேல் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்ட மாணவர்கள் சிலர் தற்கொலை செய்துகொண்டனர்.
ப்ளூ வேல் ஆன் லைன் விளையாட்டை நீக்கி விடுமாறு சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், எல்லை பாதுகாப்பு படை வீரரின் மகளான 17 வயது மாணவி, நேற்று முன்தினம் இரவு மார்க்கெட்டுக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு ஸ்கூட்டரில் புறப்பட்டார்.
வீடு அருகே உள்ள ஏரியை சுற்றி சுற்றி வந்த மாணவி பின்னர் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு, அழுதார். அந்த பகுதியில் உள்ள ஓம் பிரகாஷ் என்பவர் இதுகுறித்து விசாரிக்க, ‘‘ப்ளூ கேம் விளையாட்டில் ஈடுபட்டதாகவும் நான் தற்கொலை செய்து கொள்ளாவிட்டால் என் தாய் இறந்துவிடுவார்’’ என்றும் கூறிவிட்டு ஏரியில் குதித்தார். ஏரியை சுற்றி வந்த மாணவி குறித்து தகவல் அறிந்த போலீஸாரும் அங்கு சரியான நேரத்தில் வந்தனர். போலீஸாரும் மற்றவர்களும் மாணவியை மீட்டனர். இதனால், மாணவி உயிர் பிழைத்தார். தனது கையில் திமிங்கிலம் படத்தை மாணவி வரைந்திருந்தார்.
பின்னர், அவருக்கு அறிவுரை கூறி மாணவியை அவரது பெற்றோரிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.
https://www.youtube.com/watch?v=soRaxDRzFE0