புதிய அரசமைப்புக்கு ஆதரவு வழங்கவேண்டும் மஹிந்த! – சம்பந்தன் நேரில் வலியுறுத்து

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

“புதிய அரசமைப்புக்கு ஆதரவளிக்கவேண்டியது மஹிந்த ராஜபக்ஷவின் கடமையாகும். இதை அவரிடம் தெளிவாக எடுத்துரைத்தேன்” என்று பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பு, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்தவின் இல்லத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

இதன்போது பேசப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக கேட்டபோதே எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மேற்படி கருத்தை வெளியிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“இது நல்ல சந்திப்பு. பரஸ்பரம் கருத்துப் பரிமாறினோம். அவரது (மஹிந்த ராஜபக்ஷ) அழைப்பின் பேரில் இது நிகழ்ந்தது. அண்மைக்காலமாக இதற்கான ஏற்பாடுகள் இருந்தன. இப்போதுதான் சந்திப்பு சாத்தியமாயிற்று. பல விடயங்கள் குறித்துப் பேசினோம். தற்போதைய அரசமைப்பு உருவாக்க முயற்சிகள் குறித்து நான் எடுத்துரைத்தேன்.

புதிய அரசமைப்புக்கு ஆதரவளிக்கவேண்டும் என அவரிடம் வலியுறுத்தினேன். இரண்டு பிரதான கட்சிகள் ஒன்றுசேர்ந்து நாட்டின் முக்கியமான பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க முன்வந்துள்ளன.

பிளவுபடாத ஒரு நாட்துக்குள் ஒருமித்த தீர்வு காணப்பட ஏதுநிலை உருவாகியுள்ளது. மக்கள் ஒருவித எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

நீங்களும் (மஹிந்த ராஜபக்ஷ) உங்களது பதவிக்காலத்தில் பல முன்மொழிவுகளைச் செய்திருக்கிறீர்கள்; பல கருத்துகளை முன்வைத்துள்ளீர்கள். எனவே, இப்போது உங்களினதும் உங்கள் கட்சி சார்ந்த தலைவர்களினதும் ஒத்துழைப்பு இதற்காகத் தேவைப்படுகிறது என்பதை வலியுறுத்திக் கூறினேன்.

அவர் எல்லாவற்றையும் செவிமடுத்தார். கடந்த காலத்தில் விடப்பட்ட தவறுகள் மீண்டும் நடந்துவிடக்கூடாது என்பதை நான் அவருக்கு சொல்லியிருக்கிறேன். இந்தக் கருமங்களுக்கு ஒத்துழைக்க வேண்டியது அவரின் கடமை என்பதையும் வலியுறுத்தியிருக்கிறேன்” – என்றார் சம்பந்தன்.

ஏற்கனவே தனது ஆட்சிக்காலத்தில் நீங்கள் (சம்பந்தன்) இப்படி வருகைதந்து பேச்சு நடத்தியிருந்தால் பல பிரச்சினைகளைத் தீர்த்திருக்கலாமே என மஹிந்த கூறியிருப்பது பற்றிக் கேட்டபோது கருத்து வெளியிட்ட சம்பந்தன், “கடந்த காலங்களைப் பற்றி இப்போது பேசுவது ஏன்” என்று சிரித்தபடி பதிலளித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *