Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ’20’இற்கு மேற்குலகம் போர்க்கொடி! இராஜதந்திர நெருக்கடிக்குள் அரசு!! – தேர்தலை விரைந்து  நடத்துமாறு அழுத்தம் 

’20’இற்கு மேற்குலகம் போர்க்கொடி! இராஜதந்திர நெருக்கடிக்குள் அரசு!! – தேர்தலை விரைந்து  நடத்துமாறு அழுத்தம் 

மாகாண சபைகளுக்குரிய தேர்தல்களை ஒத்திவைக்கும் நோக்கில் அரசு முன்னெடுத்துவரும் காய்நகர்த்தல்களுக்கு மேற்குலக நாடுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன என்று இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
கொழும்பிலுள்ள தமது தூதுவர்கள் ஊடாகவே மேற்படி நாடுகள், இலங்கை அரசிடம் அதிருப்தியை வெளியிட்டுள்ளன.
மாகாண சபைகளைக் கலைக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு வழங்கும் வகையிலும்  அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்தும் நோக்கிலும் 20ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டவரைபை அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
இந்தச் சட்டமூலம் நிறைவேறும் பட்சத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன்றம் தீர்மானிக்கும் திகதிக்கு முன்னர் ஏதேனும் மாகாண சபையின் பதவிக்காலம் முடிவடைந்தால் குறித்தொகுக்கப்பட்ட திகதிவரை (நாடாளுமன்றம் தீர்மானிக்கும் திகதிவரை)  அதன் ஆயுள் தாமாகவே நீடிக்கும். அதற்கேற்ற வகையிலேயே சட்டமூலத்தில் ஏற்பாடுகள் இருக்கின்றன.
ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் 2019ஆம் ஆண்டே நிறைவடைகின்றது. எனவே, இந்தச்  சட்டம் நிறைவேறிய பின்னர் ஊவா  மாகாணத்தின் ஆயுள் முடிவடையும்வரை மாகாணசபைத் தேர்தலை ஒத்திவைப்பதே அரசின் நோக்கமாக இருக்கின்றது என எதிர்க்கட்சிகளும், சிவில் அமைப்புகளும் சுட்டிக்காட்டி வருகின்றன.
இவ்வாறானதொரு பின்புலத்தில் சிவில் அமைப்புகளுக்கும், வெளிநாட்டுத் தூதுவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. இதன்போது எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரமே மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
ஜனநாயக கட்டமைப்பில் தேர்தல் முக்கிய இடத்தை வகிக்கின்றது. அது குறிப்பிட்டதொரு தினத்தில் நடைபெறவேண்டும். இலங்கையில் ஜனநாயக ஆட்சிக்காக குரல் கொடுத்துவரும் மேற்குலக நாடுகள் இவ்வாறான சந்தர்ப்பத்தில் மௌனம் காத்தால் அதன் உண்மை நோக்கம் மீது சந்தேகம் ஏற்படும்.
குறிப்பாக, மஹிந்த ஆட்சியின்போது தேர்தல்களை உடன் நடத்துமாறு வலியுறுத்தி வந்த இந்த நாடுகள் தற்போது பின்வாங்கினால் பக்கச்சார்பான வெளிவிவகாரக் கொள்கை என்ற விமர்சனத்துக்கும் உள்ளாகவேண்டிவரும். இவை உள்ளிட்ட காரணிகளைக் கருத்திற்கொண்டே அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்திலும் மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன. மாகாண சபைகளுக்குரிய அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் அது அமைந்துள்ளது எனவும் குற்றச்சாட்டு நிலவிவருகின்றது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …